தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்

 


  தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்


அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் - 

அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ₹1000 வழங்கப்படும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சாத்தனூர்,மேட்டூர், பாபநாசம் ஆகிய பெரிய அணைகளை புனரமைக்க முடிவு 


சுய உதவிக்குழு, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு


தமிழ்நாடு பட்ஜெட் 2022-23: வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு


இல்லம் தேடிக் கல்வி திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது, அதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு;


பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 

தமிழ்வழியில் கல்வி - ரூ.15 கோடி ஒதுக்கீடு


தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு செய்யப்படும்; தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு, விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம்.


சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பிரசாரங்களால் ஏற்படும் தவறுளை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்  - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


நிதிப் பற்றாக்குறை 3.80%ஆக குறையும்


21 மொழிகளில் பெரியாரின் சிந்தனைகள்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை - 


மின்சார வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை அரசே ஏற்கும்; இதற்காக ரூ.13,108 கோடி நிதி ஒதுக்கீடு.


துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூபாய் 5,770 கோடி நிதி ஒதுக்கீடு


இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, இளநிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும்.- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு 

ரூ.162 கோடி நிதி ஒதுக்கீடு


தர்காக்கள், தேவாலயங்களை புனரமைக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு


தமிழ்நாட்டில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்க தேடல் திட்டம் உருவாக்கப்படும் 


குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், தமிழகத்தின் நிதிநிலை சீராகும்போது செயல்படுத்தப்படும்: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்


மன அழுத்தம், பதற்றம், மனச்சிதைவின் தாக்கம் அதிகமாக உள்ளது;


தமிழ்நாட்டில் மனநோய் சிகிச்சை கட்டமைப்பை வலுப்படுத்துவது இன்றியமையாதது.


கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை, தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்த திட்டம்.- நிதியமைச்சர்


தமிழகத்தில் மின்சாரத்தில் இயங்கும் 500 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிப்பு

 தமிழக அரசின் பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு ரூ.17,901.23 கோடி நிதி ஒதுக்கீடும், அரசு நிலங்களை பராமரிக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.


முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.


காவல்துறை சார்ந்த திட்டங்களுக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதேபோல் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,816 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.


அரசு நிலங்களை பராமரிக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். நவீன முறையில் நில அளவை செய்யும் ரோவர் கருவிகள் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


  இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.340.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.100 கோடி செலவில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயில்கள் புனரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.7,338.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 20, 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.


 மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்துக்கு ரூ.1,520 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான இலவச பயண மானிய திட்டத்துக்கு ரூ.928 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் அறிவித்த இலவச பயண திட்டத்தால் பேருந்தில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.


 தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளை மேம்படுத்த தலா ரூ.10 கோடி ஒதுக்கப்படும் எனவும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க புதிய தொழில் பூங்காக்கள் மூலம் ரூ.50,000 முதலீடுகள் ஈர்க்கப்படும் எனவும், தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சிக்கு ரூ.199.6 கோடி ஒதுக்கீடு எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.


பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், காலணி, தோல் தொழில் மேம்பாட்டுக்கு புதிய கொள்கை ஒன்று வகுக்கப்படும்.  சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.75 கோடி செலவில் புதிய புத்தொழில் மையம் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.


நிருபர் பாலாஜி