சட்டமன்றத்தில் கலைஞர் உருவப்படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

 


      சட்டமன்றத்தில் கலைஞர் உருவப்படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.


யானை சிலை மீது கருணாநிதி கைவைத்து நிற்பது போன்ற உருவப்படம் சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது; படத்திற்குக் கீழே ’காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.இந்திய வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கலைஞர் கருணாநிதி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் உரையாற்றினார். உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் எனவும் குடியரசு தலைவர் பேசினார். நம் நாடு இந்த வருடம் பல துறைகளில் சாதணை படைத்துள்ளது என கூறினார். தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் உருப்படம் திறந்துவைத்த பின்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வது பெருமைக்குரிய விஷயம்.


கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதிலும் பெருமை அடைகிறேன். சட்டப்பேரவையில் இதுவரை இருந்த அனைத்து சபாநாயகர்களுக்கும் வாழ்த்துக்கள்.இதுவரை இருந்த அனைத்து முதல்வர்களும் சட்டப்பேரவையின் மாண்பை காப்பாற்றி உள்ளனர். தமிழக சட்டப்பேரவை பல்வேறு சிறப்பு மிக்க வரலாற்றுகளை கொண்டது. வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர் கருணாநிதி. நம்நாடு இந்த வருடம் பல துறைகளில் சாதனைகளை படைத்துள்ளது.


மக்களாட்சி இந்த சட்டப்பேரவையின் மூலம் உருவக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையை உருவாக்க நீதிக்கட்சியை சேர்ந்தவர்கள் முயற்சி எடுத்தார்கள். சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு இந்த சட்டமன்றம் உதவியாக இருந்துள்ளது. அறியாமைக்கும், ஏழ்மைக்கும் எதிராக குரல் கொடுத்தவர் கருணாநிதி. இந்த அவையில் இன்று கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நீண்ட காலம் தனது பங்களிப்பை அளித்தவர் கருணாநிதி. மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. திரைப்படம் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர் கருணாநிதி' என்றார்.கருணாநிதி படத்திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புத்தகத்தையும், மரச்சிற்பத்திலான சட்டப்பேரவையையும் பரிசாக கொடுத்தார். அதை தொடர்ந்து முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு நினைவுப் பரிசை வழங்கினார்.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். `அவரது படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்ததை எண்ணி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன், கருணாநிதியின் மகனாக நெகிழ்கிறேன்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


தமிழ்நாடு சட்டப்பேரவை, 1921 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி உருவானது. இதையடுத்து பேரவையின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 
இந்த விழாவிற்கு முன்னிலையேற்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,


'வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நாளாக இந்த ஆகஸ்ட் 2-ஆம் நாள் இனி வரும் காலங்களில் சிறப்புப் பெறவிருக்கிறது என்பதை நான் பெருமிதத்துடன் குறிப்பிட விரும்புகிறேன். 


நம்முடைய குடியரசுத் தலைவரைப் பொறுத்தவரையில், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் நலனை முன்னிறுத்தி, வாதாடுவதில், போராடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்; இந்திய ஆட்சிப் பணி கிடைத்தும், அதனை ஏற்காமல், வழக்கறிஞராகப் பணியாற்றியவர். சமூகநீதியைத் தனது வாழ்வின் இலக்காகக் கொண்டவர். இத்தனைப் பெருமைகளுக்குரிய அவர், இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வருகை தந்திருப்பது, நாமெல்லாம் பெருமைப்படத்தக்க ஒன்றாகும்.


பழமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இந்தச் சட்டமன்றம், கடந்த ஒரு நூற்றாண்டில் பல புதுமையான சட்டங்களை, முன்னோடித் திட்டங்களை உருவாக்கி, சமதர்ம சமூகத்தைப் படைத்திட வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது.
1919-ஆம் ஆண்டில் 'மாண்டேகு - செம்ஸ்போர்டு' சீர்திருத்தங்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டத்தின் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்நாளைய மாகாண சட்டமன்றங்களில் முதன்முதலில் இடம்பெறத் தொடங்கினர். அச்சட்டமே பின்னர் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் உருவாவதற்கு வழிகோலியது. அந்தச் சட்டத்தின்படி, சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு 1920-ஆம் ஆண்டு முதன்முதலாகத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் திராவிட இயக்கத்தின் தலைமகனான நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது.


1921-ஆம் ஆண்டு கன்னாட் கோமகன் அவர்களால் முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டதன் பவளவிழா நிகழ்ச்சியும், அதேபோல 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் முதன்முதலாக 1937-ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் ஏற்படுத்தப்பட்ட சென்னை சட்டமன்றப் பேரவையின் வைரவிழா நிகழ்ச்சியும், 1997-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசால் சிறப்புடன் கொண்டாடப்பட்டதை, நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற இந்த வேளையில் நான் நினைவுகூர விரும்புகிறேன்.


அதே வேளையில், இந்தப் பெருமைமிகு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு சில சட்டங்களை எடுத்துச் சொல்லவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே மகளிருக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்தை முதன்முதலாக நிறைவேற்றிய பெருமை சென்னை மாகாணச் சட்டமன்றத்திற்கு உண்டு. அதோடு, தேவதாசி ஒழிப்புச் சட்டம், மகளிருக்கு உள்ளாட்சிப் பதவிகளில் உரிய இடஒதுக்கீடு, பெண் குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்புத் திட்டம் என மகளிர் நலன் காப்பதில் நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை உருவாக்கித் தந்த பெருமை கொண்டது.


அதுமட்டுமல்ல -பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னை மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தனித் தீர்மானம் நிறைவேற்றியது; சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தைச் செல்லுபடியாக்கிடச் சட்டம் வகுத்தது; நிலச் சீர்திருத்தச் சட்டம் உருவாக்கியது; மே தினத்தை அரசு விடுமுறை ஆக்கிட வழிவகுத்தது; மாநில சுயாட்சிக்கான தீர்மானம் நிறைவேற்றியது; பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கிட சட்டம் கண்டது; டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்திட சட்டம் நிறைவேற்றியது; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது  என பார் போற்றும் பல்வேறு சட்டங்களை, தீர்மானங்களை நிறைவேற்றிய பெருமை இந்தச் சட்டமன்றத்திற்கு உண்டு. 


தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நிலைநாட்டப்பட்ட மாபெரும் வளாகம் இது. அரசு முத்திரையில் 'வாய்மையே வெல்லும்'' எனத் தமிழ்மொழி அரியணையில் அமர்ந்து அலங்கரிப்பதையும் கண்டு மகிழ்கிறோம் நாம். மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், ஏழை எளியவர் என விளிம்பு நிலை மக்களின் நலன் காக்க இந்தச் சட்டமன்றம் தொடர்ந்து செயலாற்றி வருகின்றது.1957-ஆம் ஆண்டு இந்த மன்றத்திற்கு முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தனது கன்னிப்பேச்சில் நங்கவரம் உழவர்கள் பிரச்சினை குறித்துப் பேசி, அனைவரது கவனத்தையும் ஈர்த்து முத்திரை பதித்தவர் கலைஞர் அவர்கள். முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, அமைச்சராக, உறுப்பினராகப் பல்வேறு பொறுப்புகளில் மக்கள் பணியாற்றி, பலரது பாராட்டுகளையும், அன்பையும் பெற்றவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.


தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றிய தலைவர் கலைஞர்  50 ஆண்டுகால சட்டமன்றப் பணிகளைப் பாராட்டி நடைபெற்ற பொன்விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய பொதுவுடைமைப் போராளியும், முன்னாள் மக்களவைத் தலைவருமான திரு. சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள், 'கொள்கைகளுக்காகவும், இலட்சியங்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, அதற்குத் தீங்கு வரும்போது எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தவர் கலைஞர்' -


என்று பாராட்டிப் பேசியதை நினைத்துப் பார்க்கும்போது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் எத்தகையதொரு மாபெரும் தலைவராக விளங்கினார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும்.


'உடன்பிறப்பே! உன் இயல்பு என்மீது அன்பைப் பொழிவது!


என் இயல்பு உன் அன்புக்குக் கட்டுப்படுவது!


நம் இயல்பு கழகத்தைக் கட்டிக் காப்பது!'


- என்று தனது காந்தக் குரலால் தமிழ்நாட்டு மக்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.


அவரது திருவுருவப் படத்தைப் பார்க்கும்போது - சர் பிட்டி தியாகராயர் - டி.எம்.நாயர் - டாக்டர் நடேசனார் தொடங்கி இனமானப் பேராசிரியர் வரையிலான பல மாபெரும் தலைவர்களின் முகங்களை நான் காண்கிறேன்.முன்னாள் முதலமைச்சரான அவரது திருவுருவப் படத்தைப் பார்க்கும்போது, இன்றும் நம் முன்னால் இருந்து வழிநடத்தும் ஒரு முதலமைச்சராக அவரைக் காண்கிறேன்.


இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் அவர்கள், தமிழன்னையின் தலைமகனான கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்ததை எண்ணி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்கிறேன் - கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன்.ஜனநாயக மாண்பைக் காக்கும் தமிழ்நாடு சட்டமன்றம் இன்னும் பல நூற்றாண்டு விழாக்களைக் கண்டு, அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சட்டங்களை இயற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன்.


இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


🙏முக கவசம் உயிர்க்கவசம்🙏