தங்கம் வென்ற தங்க மகன்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு ஒரு தங்கம் கிடைக்குமா என்று நாடே ஏங்கிக்கொண்டிருந்த தருணத்தில் இருளை விலக்கும் சூரியன் போல இந்தியாவிற்காக கடைசி நாளில் தங்கப்பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் தடகள வீரர் நீரஜ் சோப்ரா.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இந்தியா உட்பட சுமார் 200க்கு அதிகமான நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்காக வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா சர்ர்பில் முதல்முறையாக சுமார் 100-க்கு மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா அதிகளவில் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த எதிர்பார்ப்பை இந்திய வீரர்கள் ஓரளவிற்கு பூர்த்தி செய்துள்ளார்கள் என்றே கூறலாம்.
இந்த ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் வீராங்களை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார். அதுவே இந்தியாவின் முதல் பதக்கமாக அமைந்தது. அதன்பிறகு மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப்பதக்கமும், பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து, மல்யுத்த போட்டியில் லவ்லினா, ஹாக்கி போட்டி (ஆண்கள் அணி ) மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா ஆகியோருக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது.
யார் இந்த நீரஜ் சோப்ரா?
1997-ம் ஆண்டு அரியானா மாநிலம் பானிப்பட் நகரில் பிறந்த நீரஜ் சோப்ரா தனது 16 வயதில் முதல்முறையாக சர்வதேச இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். அதன்பிறகு 2016-ம் ஆண்டு இந்தியாவில நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்காக முதல் தங்க பதக்கத்தை வென்றார்.
மேலும் அதே ஆண்டு போலந்து நாட்டில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா 86.48 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து புதிய சாதனை படைத்தார். தொடர்ந்து 2019-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 88.06 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்த்துடன் தங்கப்பதக்கத்தையும் வென்றார். இந்த சாதனையுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இவர் நிச்சயமாக பதக்கம் வெல்வார் என்று முன்னாள் தடகள வீரர் வீராங்கனைகள் கூறியிருந்தனர்.
கடந்த 1900-ம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட ஓட்டப்பந்தைய வீரர் நார்மன் பிரிட்சார்ட் 200 மீ ஓட்டம் மற்றும் 200 மீ தடை ஓட்டம் ஆகிய 2 போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றதே ஒலிம்பிக்கில் இந்தியாவின் தடகள வீரர் ஒருவரின் அதிகபட்ச சாதனையாக இருந்தது.
தற்போது இந்த சாதனையை தகர்த்துள்ள நீரஜ் சோப்ர தடகளத்தில் தங்கம் வென்று வரலாறு படைத்ததுடன், தனி நபர் பிரிவில் தங்கம் வென்ற 2-வது வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றதே தனி நபர் சாதனையாக இருந்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பட்டியலில், தற்போது நீரஜ் சோப்ரா இணைந்துள்ளார்.
மேலும் இளம் வயதில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பல தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அவரின் இந்த சாதனை வரலாற்றில் பொன் எழுத்தக்களால் பொறிக்கப்படவேண்டியது என்றே கூறலாம். அடுத்த தலைமுறையினருக்கு நீரஜ் சோப்ராவின் வரலாற்று சாதனை ஊக்கத்தை அளிக்கும்.
தங்கம் வென்ற தங்க மகனை இந்திய நாட்டின் ஜனாதிபதி,இந்திய பிரதமர், இந்திய நாட்டில் உள்ள அமைச்சர்கள் முதலமைச்சர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
🙏முகக் கவசம் உயிர்க்கவசம்🙏