தினம் ஒரு திருத்தலம்

 தினம் ஒரு திருத்தலம்


 ஐந்து சிவன் சன்னதி.. இரட்டை விநாயகர்..!!

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்...!!

அமைவிடம் :

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் மண்ணியாற்றின் கரையில் அமைந்ததனால் திருமண்ணிப்படிக்கரை என்றும், இலுப்பை மரம் தலவிருட்சமாக உள்ளதால் இலுப்பைப்பட்டு என்றும் இத்தலம் பெயர் பெற்றது. பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட தலம் என்ற பெருமையுடையது இத்தலம்.

மாவட்டம் :

நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைப்பட்டு, மணல்மேடு அஞ்சல், மயிலாடுதுறை மாவட்டம்.

எப்படி செல்வது?

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேட்டிலிருந்து சிறிது தொலைவில் இக்கோயில் உள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்து வசதிகள் உள்ளன. ஆலயத்திற்கு செல்ல பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

கோயில் சிறப்பு :

பொதுவாக சிவன் கோயில்களில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பார். அரிதாக சில தலங்களில் இரண்டு மூலவர்கள் இருப்பர். ஆனால் இத்தலத்தில் ஐந்து சிவன் தனித்தனி சன்னதிகளில் இருக்கிறார்.

இங்குள்ள கோபுரம் 5 நிலைகளை கொண்டது. பிரகாரத்தில் திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகர் இருக்கிறார். இவருக்கு அருகிலேயே இடம்புரி விநாயகரும் இருக்கிறார். ஒரே இடத்தில் இரட்டை விநாயகர்களை தரிசனம் செய்வது இத்தலத்தில் விசேஷமானது.

சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்ததும் இத்தலத்தில் தான்.

பிரகாரத்தில் வீமன், நகுல பூஜித்த லிங்கங்களும் இத்தலத்தில் உள்ளது.

கோயில் திருவிழா :

சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம், சிவராத்திரி, திருக்கார்த்திகை ஆகிய திருவிழாக்கள் நடக்கிறது.

வேண்டுதல் :

நோய்கள் நீங்குவதற்கு, பணியில் சிறப்பிடம் பெறுவதற்கு இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். பதினாறு பேறுகளும் பெற சோடஷலிங்க சன்னதியில் வழிபடுகிறார்கள்.

கணவனை காத்த அம்பாளான அமிர்தவல்லி தாயிடம் பெண்கள் வேண்டிக்கொண்டால் கணவனின் மீது பாசம் அதிகரிக்கும், தீர்க்க சுமங்கலிகளாக வாழலாம் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன் :

சுவாமி அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.


 பக்தியுடன்

மோகனா செல்வராஜ்