தடுப்பூசி மையங்கள் அமைத்தால்- இலவசமாக நான் வாகனம் தருகிறேன் -ஆட்சியரிடம் கூறிய Dr..பூங்கோதை

 


சுட்டெரித்த கோடை வெயிலில் கடந்த ஒரு மாதமாக அனல் பறக்க தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தற்போது ஓய்விலிருக்க,  பூங்கோதை ஆலடி அருணா எப்போதும் போல் தங்கள் களப்பணியை மேற்கொண்டு வருகின்றார்

திமுக மருத்துவ அணி நிர்வாகியும், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூங்கோதை ஆலடி அருணா வாக்குப்பதிவு முடிந்து  வழக்கமான தனது தொகுதிப் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியபடி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை தொடங்கிய பூங்கோதை, தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரானுக்கு கொரொனா தடுப்பு பணிகள் குறித்து கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

அதில், தனது ஆலங்குளம் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்க வேண்டும் என்றும் அவ்வாறு அமைத்தால் தனது தந்தை ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் இலவசமாக வாகன வசதி ஏற்படுத்தி தருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் மற்றும் ரெம் டெசிவர் உள்ளிட்ட மருந்துகளின் தற்போதைய கையிருப்பு பற்றியும் அறிந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி முழுவதும் கொரோனா தடுப்பூசி மையங்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துக் கொடுத்தால், மக்கள் எளிதாக வந்து செல்ல இலவசமாக வாகன வசதி செய்தி தருவதாக பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார்.