சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடப்படும் விழாவாகும்.
இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள்.
அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்க்கையாகும்.
இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள் என்றும், சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இருவேறு நம்பிக்கைகள் உள்ளன.
இந்த சித்ரா பௌர்ணமி விழா பல காலமாக தமிழர்களிடையே கொண்டாப்பட்டு வந்துள்ளமைக்குப் பல கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளன.
இந்த விழாவினைப் பற்றி திருச்சிராப்பள்ளி நெடுங்கலாதர் கோயிலிலும், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை விநாயகர் கோயிலிலும் கல்வெட்டுகள் உள்ளன.
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோயிலில் உள்ள கல்வெட்டில் ராசராச சோழன் பத்தாம் ஆண்டு கல்வெட்டில் சித்ரா பௌர்ணமிக்கு அவர் நிவந்தம் (கோயிற்கைங்கரியம் )கொடுத்தமை கொடுத்த குறிப்பு உள்ளது.
இந்நாளில் சிவாலயங்களில் விழா கொண்டாப்படுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இந்த சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்திரன் விருத்திராசூரன், விஸ்வரூபன் என்ற பிராமர்களைக் கொன்றமையால், இங்குள்ள சிவனை சித்ரா பௌர்ணமியில் வழிபட்டு அப்பாவத்தினை நீக்குவதாக மதுரை தலபுராணம் கூறுகிறது.
காஞ்சிபுரம் வைஷ்ணவா கோயில்களில் இவ்விழாவை நைனார் நோன்பு என்ற பெயரில் வழங்குகிறார்கள்.
உலகில் காஞ்சிபுரத்தில் மட்டுமே சித்ரகுப்தனுக்கு ஆலயம் அமைந்துள்ளது.
சித்திரை மாதத்தில் சித்ரகுப்தனுக்கு திருவிழா நடைபெறுகிறது. சித்திரை பவுர்ணமிக்கு முன்னாள் சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்று பவுர்ணமி அன்று நகர்வலம் வருகிறார்.
இந்த ஆலயம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் ராஜவீதியில் அமைந்துள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள்.
இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை
சித்ரா பௌர்ணமி விரதம் :
பொதுவாக பௌர்ணமியானது மிகவும் விஷேசமான ஒன்றாகும். மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமியன்று விரதம் இருந்து தேவியை வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும் குறைவில்லாமல் கிடைக்கும்.
மற்ற மாதங்களில் வருகின்ற பௌர்ணமியைவிட சித்ரா பௌர்ணமியானது முக்கியமானதாகும். சித்திரை நட்சத்திரமும் சேர்ந்து வந்துவிட்டால் இன்னும் சிறப்பானதாகும்.
சித்ரா பௌர்ணமி நாளை (26ஆம் தேதி) பிற்பகல் துவங்கி மறுநாள் செவ்வாய்க்கிழமை (27.04.2021) காலை நிறைவடைகிறது.
விரதம் இருப்பது எப்படி?
சித்ரா பௌர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே உண்ண வேண்டும்.
மாலையில் பௌர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பு, எருமைப்பால் சேர்த்து பாயாசம் செய்து நிவேதனம் செய்யலாம்.
படையலுடன் எல்லா காய்கறிகளும் சேர்த்து செய்த கூட்டு நிவேதிக்க வேண்டும்.
தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். குளிர்ந்த பானகங்களை தயாரித்து சித்ரா பௌர்ணமியன்று நண்பகல் ஏழைகளுக்கு வழங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
விரத பலன்கள் :
சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு.
மேலும் மனஅமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும். திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
முக்கிய குறிப்பு :
கடந்த ஆண்டு முதல் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வர தடை உள்ளது.
இந்த ஆண்டும் அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் சித்ரா பௌர்ணமியையொட்டி வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சித்ரா பௌர்ணமி அன்று அனைவரும் வீட்டில் இருந்தபடியே அண்ணாமலையாரை மனமுருக வேண்டிப் பயன் அடைவோம்.
ஓம் நமசிவாய
மோகனா செல்வராஜ்