வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைத்து எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன ஆணையம்

 


       தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற மே 2-ம் தேதி  வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  


சென்னையை பொறுத்தவரை மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு அதற்கான மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.


வாக்குப்பதிவு முடிந்தவுடன், தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் அவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 'சீல்' வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன.


 சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணிமேரி கல்லூரி, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.


வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அறையின் உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக கண்காணிக்க எல்.இ.டி. திரையும் வைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் 24 மணி நேரமும் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைகளுக்கு முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், ஆயுதப்படை போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.