அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்- விஜயகாந்த் அறிவிப்பு

 


அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாள்களே உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் கட்சியினர் விருப்பமனு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் நேர்காணல், தொகுதி பங்கீடு போற்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுகவிற்கும், தேமுதிகவிற்கும்தொகுதி பங்கீடு இழுபறி நீடித்து வந்தது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 23, பாஜகவிற்கு 20 தொகுதிகளுகும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக  முதலில் 41 தொகுதிகளைக் கேட்ட நிலையில், பின்னர் 25 தொகுதிகள் வரை இறங்கி வந்தனர். ஆனால், தேமுதிகவிற்கு 13 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா எம்.பி பதவியையும் தர அதிமுக முன்வந்தது.

இதனால், அதிமுக, தேமுதிக இடையே 3 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை இறுதி முடிவு எட்டப்படாமல் முடிந்தது. இதற்கிடையில் 234 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுக்களை தேமுதிக வாங்கியது. பின்னர், பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் மகன் விஜய பிரபகரன், சுதீஷ் ஆகியோர் விருப்ப மனு அளித்தனர்.

இதைதொடர்ந்து, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வந்த நிலையில் தேமுதிக விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தியது. இந்நிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் விஜயகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.