இன்று ஒரு ஆன்மிக தகவல்

 


சப்த கரை கண்ட சிவாலயங்கள்

சிவன்

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன். சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள்.

முருகப்பெருமான் வீசிய ஞானவேல் 7 குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையை துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்தி நின்றது. 

அதில் இருந்து நீர் பெருகி ஆறாக ஓடியது. அதுவே ‘சேயாறு’. இது தற்போது ‘செய்யாறு’ என்று அழைக்கப்படுகிறது.

வாழைப்பந்தல் அருகே முருகன் தனது சக்தி வேலாயுதத்தை கையில் எடுத்து எரிந்தார், அந்த வேல் சவ்வாது மலைத் தொடரில் உள்ள ஏழு சிகரங்களில் தவம் செய்த அந்தணர்கள் 1). புத்திராண்டன். 2). புருகூதன்,3). போதன், 4). போதவான், 5).பாண்டரங்கன், 6).வாமன், 7).சோமன் ஆகியோரை மாய்த்து மலையை துளைத்தது. அதிலிருத்து நீர், பெருகி ஆறாக வந்தது சேய்(சேய்= மகன் ) தோற்று வித்ததால் சேய் ஆறு என்பது நாளடைவில் செய்யாறு என்றும் ஆகிவிட்டது.

 தவம் செய்த ஏழு அந்தணர்களை மாய்த்ததால் முருகப் பெருமானுக்குக் கொலைபாதக தீவினை (பிரம்மஹத்தி தோஷம்) தொற்றிக் கொள்ள உமாதேவியார் சேய் ஆற்றின் வட கரையில் ஏழு சிவ ஆலயங்களையும்,தென்கரையில் ஏழு சிவ ஆலயங்களையும் நிறுவி தொழுதால்,தோசம் நீங்கும் என்று கூற அதன்படி செய்து தோசம் நீங்கியது எனபது நெடுங்கால நம்பிக்கை.

அதனைப் போக்க செய்யாற்றின் வடகரையில் 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார்.

சப்த சிவத் தலங்கள் என்பவை காஞ்சிபுரத்தின் சேய் ஆற்றில் (செய்யாறு) கரைகளில் அமைந்துள்ள ஏழு சிவத்தலங்களாகும். செய்யாற்றின் வடகரையில் அமைந்துள்ள ஏழு சிவாலயங்கள் சப்த கரை கண்ட சிவாலயங்கள் எனவும், தென் கரையில் அமைந்துள்ளவை சப்த கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. 

அந்த ஆலயங்கள் பற்றி இங்கே சிறு குறிப்பாக பார்ப்போம்.

காஞ்சி : 

திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள போளூரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில், செங்கம் நகருக்கு வடமேற்கில் உள்ளது காஞ்சி என்ற திருத்தலம். 

இதுவே சப்த கரை கண்ட தலங்களில் முதல் தலமாகும். இங்குள்ள இறைவனின் பெயர் ‘கரைகண்டீஸ்வரர்’ என்பதாகும். பழமை வாய்ந்த இந்த ஆலயம் 10-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

பின்னர் நாயக்க மன்னர்களும், நகரத்தாரும் திருப்பணி செய்துள்ளனர். இந்த ஆலயத்தில் சப்த கரை கண்ட தலங்களின் 7 சிவலிங்க திருமேனிகளும் ஓரிடத்தில் உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு நடைபெறும் அனைத்து திருவிழாக்களும், இந்த ஆலய இறைவனுக்கும் செய்யப்படுவது, இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று.

கடலாடி : 

சேயாற்றின் வடகரையில் அமைந்த, சப்த கரை கண்டீஸ்வரர் தலங்களில் இரண்டாவது தலம் இது. இங்குள்ள இறைவனின் திரு நாமம் ‘வன்னீஸ்வரர்’ என்பதாகும். 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். இங்குள்ள பர்வதமலையின் அடிவாரத்தில், அண்ணாமலையாரின் பாதம் பட்ட இடம் உள்ளது. `கடவுளின் பாதம் பட்ட மலையடி’ என்பது, ‘கடவுளடி’ என்று ஆகி, பின்னர் ‘கடலாடி’ என்றானதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 25 கிலோமீட்டரில் இந்த இடம் உள்ளது.

மாம்பாக்கம்: 

சப்த கரைகண்ட தலங்களில் மூன்றாவது இடம் இது. இங்குள்ள இறைவனின் பெயரும் ‘கரைகண்டேஸ்வரர்’ தான். சோழ மன்னர்களால் கட்டப்பட்டது இந்தக் கோவில் என்று கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. 

மகாவிஷ்ணு, அமுத கலசத்தை பூமிக்கு கொண்டு வந்து, அதையே சிவலிங்கமாக நினைத்து வழிபட்டார். அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் கலசம் அடித்துச் செல்லப்பட்டு நிலைபட்ட இடம் ‘கலசப்பாக்கம்’ என்றும், கலசத்தில் இருந்த மாவிலைகள் ஒதுங்கிய இடம் ‘மாம்பாக்கம்’ என்றும், கலசத்தில் கட்டியிருந்த நூல் ஒதுங்கிய இடம் ‘பூண்டி’ என்றும், கலசம் மீது வைக்கப்பட்ட தர்ப்பைப் புல் தங்கிய இடம் ‘பில்லூர்’ என்றும் பெயர் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. மாம்பாக்கத்தைச் சுற்றியே, கலசப்பாக்கம், பில்லூர், பூண்டி ஆகிய ஊர்கள் உள்ளன. போளூரில் இருந்து 19 கிலோமீட்டரில் மாம்பாக்கம் உள்ளது.

தென்மகாதேவ மங்கலம் : 

போளூரில் இருந்து 16 கிலோமீட்டரில் உள்ளது, மாதிமங்கலம் எனப்படும் தென்மகாதேவ மங்கலம். இது போளூருக்கும், செங்கத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது. எனவே இங்குள்ள இறைவன் ‘மத்திய கரைகண்டேஸ்வரர்’ என்று பெயர் பெற்றுள்ளார். ராஜகோபுரம் இல்லாவிட்டாலும், இரண்டு பிரகாரங்களைக் கொண்ட பெரியகோவில் இதுவாகும். சப்த கரைகண்ட தலங்களில் 4-வது தலம் இது.

எலத்தூர் : 

சப்த கரை கண்ட தலங்களில் ஐந்தாவது தலம், எலத்தூர். இது போளூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு, விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட திருக்கோவில் இதுவாகும். இங்குள்ள இறைவனின் திருநாமமும் ‘கரைகண்டேஸ்வரர்’ என்பதுதான். இத்தல இறைவனின் உருவம், சிறிய பாணமாக காட்சி தருகிறது.

பூண்டி: 

சேயாற்றின் வடரையில் அமைந்த ஆறாவது சப்த கரை கண்ட தலம் இதுவாகும். போளூரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கும் ராஜகோபுரம் இல்லை. இதுவும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம்தான். அகத்தியர் கோபத்திற்கு ஆளான இரண்டு அடியார்கள் இங்கு நரியாக இருந்து, ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருபுறமும் இரண்டு கல் நரி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பதினாறு பட்டைகள் கொண்ட ‘ஷோடச லிங்க’த் திருமேனியுடன் கரைகண்டேஸ்வரர் அருள்கிறார்.

குருவிமலை : 

காஞ்சிபுரத்திற்கு ஈசானிய பாகத்தில் அமைந்த இந்த இடத்திற்கு ‘குரு மூலை’ என்று பெயர். இதுவே காலப்போக்கில் ‘குருவிமலை’ ஆனதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 3 கிலோமீட்டரில் உள்ளது, சப்த கரைகண்ட தலங்களில் 7-வதாக அமைந்த இந்த தலம். 

இங்கும் கரைகண்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் வீற்றிருக்கிறார். இதுவும் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்தான். ஆனாலும் கோவில் முழுவதும் உருக்குலைந்து, பின்னர் பலரின் முயற்சியால் தற்போதைய நிலையில் எழுந்து நிற்கிறது.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

மோகனா செல்வராஜ்