சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதம் ஒருமுறை இடம் பெயர்கிறார்.
அதன்படி பிப்ரவரி 21ஆம் தேதி சுக்கிரன் மகரம் ராசியிலிருந்து கும்ப ராசியில் பெயர்ச்சியடைந்தார்.
சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். சுக்கிரப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும்.
எந்த ஒரு நபரும் வாழ்வில் இன்பங்களை அனுபவிக்க அருள்புரிபவர் “சுக்கிர பகவான்” ஆவார். இவரைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ராசி - ரிஷபம், துலாம்
திக்கு - தென்கிழக்கு
அதிதேவதை - இந்திராணி / சசிதேவி
பிரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
நிறம் - வெண்மை
வாகனம் - முதலை
தானியம் - மொச்சை
மலர் - வெண்தாமரை
வஸ்திரம் - வெள்ளை நிற ஆடை
ரத்தினம் - வைரம்
நிவேதனம் - மொச்சைப்பொடி அன்னம்
சமித்து - அத்தி
உலோகம் - வெள்ளி
இனம் - பெண்
அங்கம் - காமம் (இந்திரியம்)
நட்பு - புதன், சனி
பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்
காரகத்துவம் - களத்திரகாரகன்
மனைவியார் - விஷக்கடிகன், தேவயானி
பிரதான தலங்கள் - கோலவில்ராமர் ஆலயம், திருவெள்ளியங்குடி, திருவரங்கம்
அருள் பெற்ற சிவத்தலங்கள் - கஞ்சனூர், திருமயிலை, திருமுது குன்றம் முதலியன குறிப்பிடத்தக்க
திருமால்பதி - திருப்புளியங்குடி
பெயர் விளங்கும் தலம் - திருவெள்ளியங்குடி
வேறு பெயர் - வெள்ளி (ஆங்கிலத்தில் வீனஸ்)
வழிபாட்டு பலன் - நல்ல இல்லத்தரசி அமைதல், லட்சுமி கடாட்சம், கீர்த்தி
சுக்கிர பகவானை வழிபட்டு வந்தால், வாழ்வில் சுக்கிர பலம் பெறலாம். சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
எந்தவொரு பலனை அடைவதற்கும் குருவின் அருள் மிக மிக அவசியம். குருவின் அருளிருந்தால்தான் சகல யோகத்தையும் பெறமுடியும். மற்ற கிரகங்களின் அருள் கிடைப்பதற்கே, குருவின் அருள் தேவை.
கிரகங்களின் அருளுக்கு மட்டுமின்றி, இறையருளைப் பெறுவதற்கும் குருவருள் அவசியம். குருவருள் இருந்தால்தான் திருவருள் உண்டு என்றொரு வாசகமே உண்டு.
சுக்கிர பகவானின் அருளைப் பெறுவதும் மிக மிக அவசியம். திருமண யோகத்துக்கும் வீடு மனை உள்ளிட்ட சொத்துகளைப் பெறுவதற்கும் சந்தான பாக்கியம் எனப்படும் குழந்தைச் செல்வம் கிடைப்பதற்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் இல்லாமல், கடன் தொல்லை இல்லாமல் வாழ்வதற்கும் சுக்கிரனின் அருளைப் பெறவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சுக்கிர பகவான் யோககாரகன். உலகாயத வாழ்வில், என்னென்ன லெளகீக சந்தோஷங்கள் தேவையோ, அவை அனைத்தையும் நமக்குத் தந்தருளும் வள்ளல் கடவுள்தான் சுக்கிர பகவான்.
சுக்கிர பகவானுக்கு உரிய நாள் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர வாரத்தில், சுக்கிர பகவானை பிரார்த்திப்பதும் வழிபடுவதும் விசேஷமானது.
வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர காயத்ரி சொல்லி வழிபடுங்கள்.
சுக்கிர பகவான் காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரஜோதயாத்
அதாவது, அஸ்வக் கொடியைக் கொண்ட அசுரர்களின் குருவே. எங்களுக்கும் எங்களின் குடும்பத்துக்கும் சுப நிகழ்வுகளைத் தந்தருள்வாய்.
வெள்ளி எனும் சுக்கிர வேந்தனே. எங்களுக்கு எல்லாக் காலத்திலும் வரங்களைத் தந்து வாழவைப்பாயாக! என்று அர்த்தம்.
இந்த நன்னாளில், சுக்கிர வார வெள்ளிக்கிழமையில், சுக்கிர பகவானை வேண்டிக்கொள்ளுங்கள்.
வீட்டில் விளக்கேற்றி, சுக்கிர காயத்ரி சொல்லி பாராயணம் செய்து, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். கஷ்டங்களும் துக்கங்களும் காணாமல் போகும். கவலைகள் அனைத்தும் பறந்து போகும். பொன்னும் பொருளும் சேரும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் நமசிவாய
மோகனா செல்வராஜ்