கொரோனா தடுப்பூசியால் உயிரிழப்பு - மதுரையில் மறுபிரேத பரிசோதனை
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே சின்னவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அம்பிகா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் மனோகரன், புதூர் பேரூராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் இருந்தார். 

கொரோனா தடுப்பு பணியில் முன்களப்பணியாளராக செயல்பட்டார். ஜன. 21ல் கொரோனா தடுப்பூசி போட்டார். ஜன. 30ம் தேதி திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். அவரது உடலை மருத்துவ நிபுணர் குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் நேற்று மீண்டும் விசாரித்தனர். அப்போது அரசுத் தரப்பில் சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 ‘‘மனோகரனின் உடல் இரண்டாவது முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் விதிகளை பின்பற்றி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

தற்போது உடல் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ளது.  சில பரிசோதனைகளின் பகுப்பாய்வு முடிவுகள் வர வேண்டியுள்ளது. எனவே, 2 வாரம் கால அவகாசம் வேண்டும்’’ என கூறப்பட்டது.