மாசி மகம் (27.02.2021) பற்றிய பதிவுகள் :
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும்.
அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.
தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகாமகம்) சிறப்பாக நடைபெறும்.
அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.
ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று.
இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் அக்குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது.
அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.
எனவே மாசிபௌர்ணமி அன்று அன்னையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட எடுத்த காரியங்களில் வெற்றி, வாழ்வின் இன்பம் ஆகியவற்றைப் பெறலாம்.
மாசிப்பௌர்ணமியில் தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது
மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மாசிமாதத்தில் ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் அமிர்தம் இருப்பாதாகக் கருதப்படுவதால் ஆறு குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுகின்றனர்.
மாசி மகத்தில் புனித நீராடுவதன் மூலம் தங்களின் பாவங்கள் நீங்கும் என்பதால் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் நீராடி இறைவனை வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டித்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
பௌர்ணமிகளில் மாசிப் பௌர்ணமி அன்று மட்டும்தான் மறைந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் நடத்தப்படுகிறது.
வள்ளலாளன் என்ற திருவண்ணாமலை அரசனுக்கு அண்ணாமலையார் அரசனின் வேண்டுகோளின்படி மாசி பௌர்ணமி அன்றுதான் நீத்தார் கடன் செய்தார்.
அதனால் மாசி பௌர்ணமி அன்று பெரியோர்களுக்கு சிரார்த்தம் இன்றும் செய்யப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்நாளில் விரதமிருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பு.
மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிம்ம ராசிக்குரியது.
அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்,
இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.
மக நட்சத்திரம் பெருமாளுக்கு உகந்த நாள். நீர் நிலை உள்ள இடங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
மகா மக தீர்த்தக்குளம்
வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த நேரத்தில் மீண்டும் உயிர்களை படைப்பதற்கான பீஜம் தாங்கிய அமுத கும்பத்தை பிரம்மா நீரில் மிதக்க விட்டார்.
அது வெள்ளத்தில் மிதந்து ஒதுங்கிய இடமே கும்பகோணம். மாசிமகத்தன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் பிரதான வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது.
இங்குள்ள தீர்த்தம் மகாமகத் தீர்த்தம். காசியில் ஓடும் புனித கங்கையும் தன் பாவம் தீர நீராடும் குளம் இது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமை பெற்ற தலம்.
இப்படி தீர்த்தவாரிக்கு பெயர் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று மகாபலிபுரம்.
இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான்.
திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் இவர் மாமல்லை கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார்.
அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார். இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து,
எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார்.
முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார்.
ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த அர்த்தசேது கடலில் மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம்.
ராமர், ராவணனை வதம் செய்வதற்காக சிவனருள் பெற வேண்டி, அகத்திய முனிவரின் ஆலோசனையை நாடினார்.
அம்முனிவர், கும்பகோணம் வந்து சில காலம் தங்கி இத்தலத்திலுள்ள காசி விஸ்வேசுவரரை வழிபட்டால் உருத்திராம்சம் பெறலாம் எனக்கூறினார்.
அதன்படி ராமர் இங்கு வந்து விஸ்வேசுவரரை வழிபட்டு, தன் உடலில் உருத்திர அம்சம் ஆரோகணிக்கப் பெற்றார். அதன் காரணமாக இவ்விடமும் காரோணம் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
இதன் பழைய பெயர், திருக்குடந்தைக் காரோணம். மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ளது இக்கோயில். மாசிமகத்தில் விளக்கு ஏற்ற வேண்டும்.
பிள்ளை வரம் கிடைக்கும்
மாசி மகம் மகத்துவம் மிக்கது. சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசிமகம் திகழ்கிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன.
சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசிமகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. மாசிமகம் தோஷம் தடைகள் நீக்கும் புனித நாளாகும்.
ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை பிறப்பதாக ஐதீகம்.
இலக்கியங்கள்
சங்க காலம் தொடங்கி இவ்விழா நடைபெற்றது தொடர்பான செய்திகள் இலக்கியங்களிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.
மதுரைக் காஞ்சியின் ஆசிரியா் மாங்குடி மருதனாா் ஏழாம் நாள் இறுதியில் நீராடல் விழா அமைந்தது பற்றிக் குறிப்பிடுகின்றார்.
சங்க காலப் பாண்டிய மன்னன் முந்நீா் விழாவின் நெடியோன் என்று அழைக்கப்படுவதாக ஒன்பதாவது புறநானூற்றுப் பாடலில் காணப்படுகிறது.
திருஞானசம்பந்தா் தன்னுடைய மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுகிறார்.
ஜோடதி ரீதி
பெண்ணிற்கு தாய்மையடையும் பாக்கியம் உண்டாவதைப் பற்றி ஜோதிட ரீதியாக பார்க்கும் போது ஒருவரின் ஜனன ஜாதக ரீதியாக 5ம் பாவம் புத்திர ஸ்தானம் என்றாலும், பெண்களுக்கு 5க்கு 5ஆம் பாவமான 9ஆம் பாவமும் புத்திர ஸ்தானமாகக் கருதப்படுகிறது.
அதுமட்டுமின்றி நவகிரகங்களில் குரு பகவான் புத்திர காரகனாக கருதப்படுகிறார். எனவே, பெண்களுக்கு 5ஆம் பாவமும் 9ஆம் பாவமும், புத்திர காரகன் குருவும் பலமாக அமைந்துவிட்டால் சிறப்பான புத்திர பாக்கியத்தை பெற்றெடுக்கும் யோகமும் உண்டாகும்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் நமசிவாய
மோகனா செல்வராஜ்