பாவங்கள் நீக்கும் மாசி மாதம்!
தமிழ் மாதங்களில் 11வதாக வரக் கூடியது மாசி மாதம். சூரியன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப் பெயர்வு செய்வதையே மாசி மாதம் என்கிறோம். மாதங்களில் மிகவும் மகத்தானது மாசி மாதம். இந்த மாதத்தில்தான் நம் ஊர்களில் உள்ள கோவில்கள் தீர்த்தவாரி நடைபெறும். தெய்வங்களுடன் இணைந்து மக்களும் நீராடி இறைவனை வணங்கி பல்வேறு புண்ணியங்களைப் பெறுவது இந்த மாதம்தான்.
மாதங்களில் மகத்துவம் நிறைந்தது மாசி மாதம். மாதங்களில் மாசி மாதத்தினை 'கும்ப மாதம்" என்றும் அழைப்பார்கள். இவ்வளவு மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் மாசி மகம், சிவராத்திரி, மாசி அமாவாசை மற்றும் காரடையான் நோன்பு போன்ற புண்ணிய நிகழ்வுகள் பலவும் வருகின்றன. மாசி மாத விழாக்கள் குறித்தும், அதன் அற்புதங்களைப் பற்றியும் பார்க்கலாம்.
பொதுவாக மாசி மாதத்தில் புனித நீராடினால் நம்முடைய தோஷங்கள் நீங்கும். புண்ணிய நீராடுவது மட்டுமின்றி சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்ற மாதமாகவும், மகா சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய தினங்களை தன்னகத்தே கொண்ட மாதமாகவும் மாசி விளங்குகிறது.
மாசி மாதத்தில் மகா சிவராத்திரி, மாசி மகம் உள்ளிட்டவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் உதித்தவள் என்பதால் மாசி மகம் சிறப்பானதாக கருதப்படுகிறது.
மாசி பௌர்ணமி : (27/02/2021)
இந்த ஆண்டு மாசி 15ஆம் தேதி அதாவது சனிக்கிழமை (27.02.2021) மாசி பௌர்ணமி வருகிறது. இத்தினத்தில் இறைவனை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.
மாசி மகத்தன்றுதான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை காத்து ரட்சித்தார். இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்கு துளசியை அர்ச்சித்து வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.
அண்ணாமலையாரே வள்ளாலன் என்ற தன் பக்தனுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாத பௌர்ணமி தினத்தில்தான். எனவேதான் வழக்கமாக அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது.
மாசி மகம் :(27.02.2021)
மாசி மகம் மாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள்.
அந்த வகையில், வரும் (27.02.2021) சனிக்கிழமை அதாவது, மாசி 15ஆம் தேதி மாசி மகத்தன்று இறைவனை தரிசனம் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
மகா சிவராத்திரி(11/03/2021)
மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
நித்திய சிவராத்திரி
மாத சிவராத்திரி
பட்ச சிவராத்திரி
யோக சிவராத்திரி
மகா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும்.
சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும்.
அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.
'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும், ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது
காரடையான் நோன்பு(14/03/2021)
மாசி சரடு பாசி படரும் என்ற சொல்வார்கள். அதாவது மாசி வெள்ளிக் கிழமைகளில் கட்டப்படும் மஞ்சள் சரடு, பாசி படரும் வரை நிலைத்திருக்கும்.
மாசி மாதம் நல்ல யோகம், திதி கூடிய ஒரு வெள்ளிக்கிழமை அன்று காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து மாங்கல்ய சரடை சுமங்கலி பெண்கள் அணிந்து கொண்டால் தீர்க்க சுமங்கலியாகவே அவர்கள் வாழ்வார்கள்.
மாசி மாதத்தில் புதுமனை புகுவிழா அல்லது புதிய வீடுகளுக்கு குடியேறுவது என்பது வாழ்வில் வசந்தத்தைக் கொண்டு வரும்.
இந்த மாதத்தில்தான் சங்கடஹர சதுர்த்தி (02.03.2021) சிறப்பிக்கப் படுகிறது. அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் எல்லா தோஷங்களும் நீங்கும்.
இந்த மாதத்தில் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. தை மாத அமாவாசை அன்று செய்த பலன்கள் மாசி மாத அமாவாசையின் போது தர்ப்பணம் செய்யும் போதும் கிடைக்கிறது.
மாதம் பிறக்கும் முதல் நாளிலேயே புண்ணிய நீர் நிலைகளில் நீராடுவது, நம்முடைய பாவங்களை நீக்கி நம் முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தரும்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் நமசிவாய
மோகனா செல்வராஜ்