நீலகிரி மாவட்டத்துக்கு வர இ-பதிவு தொடர்ந்து அமல்

 


நீலகிரி மாவட்டத்துக்கு வர இ-பதிவு முறை தொடர்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பரில் கொரோனா ஊரடங்கு தளர்வின்படி இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக இ-பதிவு முறை தொடரும் என அறிவித்தது. 

இதில், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு, உடனுக்குடன் தானியங்கி முறையில் நீலகிரிக்கு வர அனுமதி வழங்கப்படுகிறது. 

டிசம்பர் மாதம் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வர இ-பதிவு முறை தேவையில்லை என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

ஆனால், இ-பதிவு முறை தொடர்ந்து அமலில் உள்ளது. சுற்றுலா பயணிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்த பின்னரே நீலகிரிக்கு வர வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். 

அவர் கூறுகையில், ‘நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். 

அரசு ஏற்கனவே உள்ள இ-பாஸ் நடைமுறையை மாற்றி இ-பதிவு முறையை  அமல்படுத்தியுள்ளது. 

அதனடிப்படையில் வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பதிவு முறை தொடர்ந்து அமலில் உள்ளது. 

எனவே வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவரும் இ-பதிவு செய்து வரவேண்டும்’ என்றார்.