சோனியா பற்றி விமர்சனம்... பாஜக ஐடி விங் நிர்வாகியை கண்டித்து... மகிளா காங்கிரஸ் போராட்டம்

 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த பாஜக ஐடிவிங் செயலாளர் நிர்மல்குமாரை கண்டித்து மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹசீனா சையத் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 


தமிழகத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்த ராகுல்காந்தி, நாக்பூர் டவுசர்வாலாக்களால் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது எனக் கூறியிருந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பற்றி அவர் விமர்சித்திருந்த நிலையில் பாஜக ஐடி விங் நிர்வாகி நிர்மல் குமார், சோனியா குறித்து ஒரு கருத்தை கூறியிருந்தார். 

அதில் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இடம்பெற்றிருந்ததால் ஆவேசமடைந்த மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹசீனா சையத், நிர்மல் குமார் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி சென்னை மதுரவாயலில் போராட்டத்தில் குதித்தார். 

பெண் தலைவரை இழிவுபடுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளதாகவும், சோனியா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டமைக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

இதனிடையே சொந்தக் கட்சி நிர்வாகியாக இருந்தாலும் கூட, குஷ்பு இந்த விவகாரத்தில் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பெண்களை விமர்சிக்கும் போக்கு சரியானதல்ல என அவர் தெரிவித்திருக்கிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட நிர்மல் குமார், தாம் கூறிய கருத்து தரம் தாழ்ந்தவை அல்ல எனக் கூறியிருக்கிறார்.