முதுகுவலி

 



இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலானோரை முதுகு வலி பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த பிரச்னைக்குதீர்வு காணும் பொருட்டு, முதுகு வலிக்கான காரணத்தையும், அதற்கான தீர்வையும் பற்றி விரிவாக காண்போம்... ...

நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை முதுகுவலி. அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள், மார்க்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் தாக்குகிறது இந்தப் பிரச்சனை. முதுகுவலி ஏற்பட காரணம் என்ன? 

முதுகுவலியை எப்படி குணப்படுத்துவது இதுபோன்ற பல கேள்விகள் நம்முள் இருக்கின்றன. இதற்கானத் தீர்வுகளை இங்கு காண்போம்.

முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும், 12 எலும்புகள் மார்பு பகுதியிலும், 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும், 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும், கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக் கூடியதாகவும் இருக்கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.

இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.

முதுகெலும்பு எந்த வயது வரை வளரும்?

குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.

முதுகெலும்பின் அமைப்பில் ஆணுக்கும் - பெண்ணுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா ?

பொதுவாக முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.

முதுகுவலி தோன்ற காரணங்கள்:

1.முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

2.வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

3.உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

4.முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

5.மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ்.

பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும்.

இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.

முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.

முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். 

பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம். அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.

பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட கருவி முதுகுவலிக்கும்,கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.

அதிக அளவு எடையுள்ள பொருள்களை தூக்கும் போது முதுகுத் தண்டு மற்றும் தசைகளில் அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலர் வேலைசெய்யும் பொழுது தவறான முறையில், ஒரே கைகளில் எடையைத் தூக்கி கொண்டு செல்வார்கள். இதனால் முதுகு வலி ஏற்படலாம். 

 பெண்கள் ஹீல்ஸ் கொண்ட காலணிகள் அணிவதால், இடுப்புத் தசை அழுத்தப்பட்டு அடிமுதுகில் வலி ஏற்படுகிறது. 

செரிமானக் கோளாறு, குடல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்த்தால் முதுகுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பல மணி நேரம் தொடர்ந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதால், முதுகுத் தண்டுவடத்தின் நெகிழ்வுத்தன்மை குறைந்து இறுக்கமாகிறது. இதனாலும் முதுகுவலி ஏற்படலாம். 

 புகைபிடிப்பதால், முதுகுத்தசை உறுதிக்கு உதவும் ஊட்டச்சத்துகள் அங்கு சென்று சேராமல், முதுகுத்தசை வலுவிழந்துவிடுகிறது.

எந்தவித சத்துக்களும் இல்லாத நொறுக்குத் தீனிகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் விளைவாக அடிமுதுகு உட்பட உடலில் பல பாகங்களில் வீக்கம், வலி ஏற்படுகிறது.

அலுவலக வேலைச்சுமை, வீட்டுப் பிரச்சனைகளால் ஏற்படும் மனஅழுத்தத்தின் விளைவாகவும் முதுகுவலி ஏற்படலாம்.

முதுகுவலியை விரட்டும் வழிகள்:

👉 பெரும்பாலும் அலுவலகங்களில் அமர்ந்து கொண்டே தான் வேலை செய்ய வேண்டிய நிலை இருக்கும். எனவே அவர்கள் வேலை செய்யும் போது ஒழுங்காக, நேரான முறையில் வசதியாக அமர்தல் அவசியம். அதுமட்டுமின்றி நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே இருக்காமல், கொஞ்சம் எழுந்து நிற்பது, நடந்து செல்வது என உடலுக்கு அவ்வப்போது வேலை கொடுப்பது நல்லது.

👉 வாரத்தில் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கமாக கொள்ளுங்கள். வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைகளை உற்சாகப்படுத்த இது உதவும். 

👉 ஆண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்றும் முதுகு வலிக்கு நீச்சல் உடற்பயிற்சி செய்தால் எந்த தைலம், மருந்தும் தேவையில்லை.

👉 பெண்கள் அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

👉 முதுகு வலி அதிகமாக இருப்பவர்கள் 5 மிளகு, 5 கிராம்பு, 1 கிராம் சுக்கு சேர்த்து நீர் விட்டுத் தேநீர் செய்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.

நன்றி தொகுப்புமோகனா செல்வராஜ்