சுவையான இனிப்பு இட்லி!!
குழந்தைகளுக்கு இட்லி என்றால் மிகவும் பிடிக்கும். இத்தகைய இட்லியில் பல வகைகள் உள்ளன.
அதில் வித்தியாசமான இட்லி என்றால் ரவை இட்லியைத் தான் பெரும்பாலானோர் சொல்வார்கள்.
ஆனால், சத்து நிறைந்திருக்கும் முந்திரி, திராட்சை கொண்டும் இட்லி செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?
முந்திரி, திராட்சை கொண்டு இட்லி செய்தால், குழந்தைகள் இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஏனெனில் இந்த இட்லி இனிப்பாக இருக்கும். இப்போது இந்த இனிப்பு இட்லியை எப்படி எளிதாக செய்வதென்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
ரவை - 2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
அவல் - 200 கிராம்
வெல்லம் (பொடித்தது) - 100 கிராம்
காய்ச்சி ஆற வைத்த பால் - 1 டம்ளர்
முந்திரி - 20
திராட்சை - 20
ஏலக்காய் (பொடித்தது) - 10
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் அவலை நன்றாகக் கழுவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அவலில் இருக்கும் தண்ணீரை வடித்து, இதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அவல் கலவையுடன் ரவை, வெல்லம், பால், முந்திரி, திராட்சை, ஏலக்காய், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலக்கி ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் நெய்யைத் தடவி மாவை இட்லிகளாக ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால்,
சூடான இனிப்பு இட்லி ரெடி.
தேங்காய்ப்பாலுடன் இனிப்பு இட்லியை பரிமாறினால் சுவையாக இருக்கும்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா