இன்று ஒரு ஆன்மிக தகவல்

 இன்று ஒரு ஆன்மிக தகவல்

திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால் ஒதுங்கலாமா


*திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால் மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணத்தில் ஒரு கதையும் சொல்லப்பட்டுள்ளது  அது:

🌹மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி. 🌹

🌹அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார். 🌹

🌹அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று  மழை பொழியத் தொடங்கியது.🌹

🌹பூமியில் நடக்கும் அனைத்தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள்.

அக்கினி மலையிலானது திருவண்ணாமலை. அப்படிப்பட்ட பூமாதேவியை குளிர்விக்க - சாந்தப்படுத்த - இப்படிப்பட்ட அமுத புஷ்ப மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு இறைத்தன்மையுடையது. 🌹

🌹ஒரு கோடி மழைத் துளிகளுக்குப்பின் ஒரேயொரு அமுதத் துளி ஒன்று கீழே இறங்கும். 

இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். பூமி குளிரும் .விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.🌹

🌹மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அவள் வாயில் பட்டது. அதில் அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது. அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது. 🌹

🌹அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். 

அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.🌹

🌹அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. 

அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது.🌹

🌹மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம். 

மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். 

தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும் என்பது விதி.🌹

 🌹இனி கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், முடிந்தவர்கள் மழைக்கு ஒதுங்கவேண்டாம் ..!🌹

#ஓம்நமசிவாய

மோகனா செல்வராஜ்