தைப்பொங்கல் -வழிபட உகந்த நேரம்-பொங்கல் வைக்கும் முறை

 

இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்

தைப்பொங்கல் -வழிபட உகந்த நேரம்-பொங்கல் வைக்கும் முறை:

தைப்பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றி கூறி வழிபடும் பண்டிகையாகும்.

 புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்திற்கும், கால்நடை உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல் பண்டிகையாகும்.

பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரம்

காலை 09.35 மணி முதல் 11.05 மணி வரை

மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை

மாலை 06.00 மணி முதல் இரவு 07.35 மணி வரை

பொங்கல் வைக்கும் முறை :

காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கை ஏற்றுங்கள். விளக்கிற்கு பூ சூட்டி அலங்கரியுங்கள். விளக்கின் முன் பெரிய வாழை இலையை விரித்து, வலது ஓரத்தில் சாணப்பிள்ளையாரையும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள்.

இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசி, கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனி அவரை, பூசணித்துண்டுகள், பிடிக்கிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை), வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றை படைக்க வேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் நிற்கும் படி கட்டி வையுங்கள்.

பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய் சேர்த்து தயாரித்த காப்பரிசியை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பொங்கல் பானையை மண் அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். ஒரு பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டியப்பிறகு, உங்கள் குலதெய்வம் இருக்கும் கோவிலின் திசையை நோக்கி காட்டுங்கள்.

பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும், தேங்காய் உடைத்து, அதிலுள்ள தண்ணீரை பானையில் விடுங்கள். சூடம் ஏற்றி அடுப்பை பற்ற வையுங்கள். மண்ணெண்ணெய் விட்டு அடுப்பு பற்ற வைப்பதை தவிர்க்கவும்.

பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றுங்கள். தேவையானால், சிறிதளவு பசும்பால் சேர்க்கலாம். தண்ணீர் கொதித்து பொங்கியவுடன், பொங்கலோ பொங்கல் எனச் சொல்லி குலவையிடுங்கள். கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி பொங்க இருக்கிறோமோ, அந்தளவிற்கு எடுத்துவிட்டு பச்சரிசியை இடுங்கள். பொங்கல் தயாரானதும் இறக்கி விடுங்கள். பின்பு, அதே அடுப்பில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து விடுங்கள். பொங்கல் பானைகளை விளக்கின் முன் வைத்து, பூஜை செய்யுங்கள்.

வழிபடும் முறை :

சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், பிற ஸ்லோகங்கள், பாடல்களைப் பாடுங்கள்.

 முதலில் பொங்கல், பழம் ஆகியவற்றை ஒரு இலையில் வைத்து காகத்திற்கு வைக்க வேண்டும்.

 காகம் உணவை எடுத்தப்பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும்.

 அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். மதிய வேளையில், காய்கறி சமைத்ததும், திருவிளக்கேற்றி, ஒரு இலை விரித்து பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறி வகைகளை இலையில் வைக்க வேண்டும்.

 அதை முன்னோர்களுக்கு சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் ஒற்றுமையாக சாப்பிட வேண்டும்.

வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும்.

ஊர் மக்கள் ஒன்று கூடி கோவில்களிலும் பொங்கல் வைத்து வழிபடலாம்.

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன் நன்றி