தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடக்கம்

தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்குகிறது. இந்த பணிகளை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கி வைக்கிறார். 

ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்துள்ளது. 

அவற்றை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த வாரம் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. 

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படுகின்றன. 

தமிழகத்தில் மட்டும் 166 மையங்களில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

முதல் கட்டமாக அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கும் மருத்துவம் சாரா பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 

இதற்காக சென்னைக்கு கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ்கள் வந்தன. அது போல் கோவாக்சின் தடுப்பு மருந்துகளும் 20 ஆயிரம் டோஸ்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை சென்னையில் குளிர்சாதன அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதற்காக தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

முதல் கட்டமாக பெயர்களை முன்பதிவு செய்த சுகாதார பணியாளர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். கர்ப்பிணிகள், சிறுவர்களுக்கு போடப்படாது. 

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் தடுப்பூசி போடப்படும். இவை அனைத்தும் இலவசமாகவே போடப்படுகிறது. 

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுமார் 30 நிமிடம் பக்கத்து அறையில் அமர வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே அனுப்பி வைக்கப்படுவார்கள். 

தமிழகத்தில் தற்போது வரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக சமூகத்தில் முதல் நிலை பணியில் உள்ளவர்களுக்கும், காவல் துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். 

தடுப்பூசி என்பது நோய் வராமல் தடுக்க மட்டுமே. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 

தடுப்பூசிகள் 2 முறை 28 நாட்கள் இடைவெளியில் இலவசமாக போடப்படும். ஒரே நிறுவனத்தின் தடுப்பூசி தான் இரண்டு முறையும் போடப்படும். 

வேறு நிறுவனத்தின் தடுப்பூசி போடப்படாது. இந்த பணிகள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே நடைபெறும்.