சனீஸ்வரர் -ஒரு பார்வை



சனீஸ்வரன் (சமக்கிருதம்: शनि, Śani) என்பவர் இந்து சோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். இந்து தொன்மவியலின் அடிப்படையில் இவர் சூரிய தேவன் - சாயா தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். பொதுவாக காகத்தினை வாகனமாக கொண்டவர். இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக / மந்தமாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது. எனவே மந்தன் எனும் பெயர் வழங்கப்படுகிறது.

வேறு பெயர்கள்

சனி தேவன்

சனீஸ்வரன்

மந்தாகரன் - மந்தமானவன் (மெதுவானவன்)

சாயாபுத்ரன் - சாயையின் மகன் (சாயபுத்ரா)

இவ்வாறு பல்வேறு பெயர்கள் சனீஸ்வரன் அழைக்கப்படுகிறார். நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் இவர் ஒருவரே ஆவார்.

சூரியதேவரின் மனைவி சந்தியாதேவி, நீண்ட நெடுங்காலமாக சூரியனையும், அவரது வெப்பத்தையும் அருகில் இருந்து தாங்கி வந்ததன் காரணமாக தன்னுடைய சக்தியை இழந்திருந்தார். ஆகவே அவர் பூலோகம் சென்று தவம் செய்து மீண்டும் சக்தியைப் பெற எண்ணினார். 

அதை சூரியனிடம் சொல்ல பயந்த சந்தியா, தன்னுடைய நிழலில் இருந்து தன்னைப் போன்ற உருவம் கொண்ட பெண்ணைத் தோற்றுவித்தார். நிழலில் இருந்து உருவானதால் அந்தப் பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டார்.

இதையடுத்து சந்தியா தவம் செய்வதற்காக பூலோகம் செல்ல, சாயாதேவி சூரியனுடன் வாழ்ந்து வந்தார். சாயாவிற்கு சனி என்ற மகன் பிறந்தார். 

நிழலின் மகனாகப் பிறந்ததால் சனி கருமை நிற தோற்றத்துடன் இருந்தார். அதைக் கண்ட சூரியன் சனியை தன் புதல்வனாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். 

அப்போது சாயா கண்ணீர் விட்டார். அதைக் கண்டு கோபமடைந்த சனி தன் வக்கிர பார்வையை சூரியன் மீது செலுத்தினார். 

அப்போது சூரியன் மீது கிரகணம் ஏற்பட்டது. சனியின் சக்தியைக் கண்டு வியந்த சூரிய தேவர் சிவபெருமானிடம் சனியைப் பற்றி கேட்டார். 

அதற்கு சிவபெருமான் தேவர்கள், கடவுளர்கள், மக்கள் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் அவர்களின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கவே சனி பிறந்துள்ளதாகக் கூறினார். 

இதனால் மகிழ்ந்த சூரியன், சனியைத் தன் புதல்வனாக ஏற்றுக் கொண்டார். 

சனி வளர்ந்த பிறகு தன் பொறுப்பை உணர்ந்து கொண்டார். பாரபட்சமின்றி நீதி வழங்க பந்த பாசங்களைத் துறக்க வேண்டும் என்பதால் சனி தன் பெற்றோரைப் பிரிந்து சென்று சனிலோகத்தில் வாழத் தொடங்கினார். 

இவரது வக்கிர பார்வையின் பிடியில் இருந்து சிவபெருமான் உட்பட யாருமே தப்பியதில்லை என்பர்.

சனீசுவரனுக்கும் கருமை நிறத்திற்குமான குறியீடு கவனத்தில் கொள்ளத்தக்கது. 

கோயில்களில் சனீசுவரனுக்கு கருமை நிற ஆடையும், கரிய எள்ளை முடிந்த கரிய துணியை திரியாக கொண்ட விளக்குகளும் கொடுக்கப்படுகின்றன. 

இவற்றோடு சனீசுவரனின் வாகனமாக கருதப்படும் காகமும் கருமை நிறமுடையதாகும்.

இவ்வாறு பல்வேறு பட்ட குறியீடுகள் கருமை நிறம் கொண்டவையாக உள்ளன. 

இவை இருள் சூழ்ந்த பாதாள உலகத்தினைக் குறிப்பதாகவும் கருத இடமுண்டு. கிரகங்களில் சேவகனான இவர், மனித உடலில் நரம்பு ஆவார். தொடை, பாதம், கணுக்கால் இவற்றின் சொந்தக்காரர். பஞ்சபூதங்களில்- காற்று. ஊழியர்களைப் பிரதிபலிப்பவர். பாப கிரக வரிசையில் முதலிடம் வகிப்பவர். 

இவரின் நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்திரட்டாதி. உலோகப் பொருள்களில் - இரும்பு இவருடையது. கிரக ரத்தினங்களில் நீலக்கல் இவருடையது. 

லக்னத்தில் சனி நின்றால் ஆயுள் விருத்தி உண்டு. 

3-ஆம் இடத்தில் இருப்பின் தீர்க்காயுள், சரளமான பணவருவாய், பெயர்-புகழ் மற்றும் அரசியல் செல்வாக்கு கிடைக்கும். 

6-ல் அமர்ந்திருந்தால் தன யோகம், சத்ரு ஜெயம், தன்மான குணம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும்

கோயில்கள்

திருநள்ளாறு சனீஸ்வரர்

சேதி நாட்டு இளவரசியான தமயந்தியை தேவர்கள் மணம்புரிய விரும்பிய நிலையில், நிடத நாட்டு மன்னன் நளன் திருமணம் செய்தான். கோபம் கொண்ட தேவர்கள் சனீஸ்வரரின் உதவியை நாடினர். நளனின் மனஉறுதியை எடுத்துக்காட்ட ஏழரை ஆண்டுகள் சனீஸ்வரர் பீடித்தார். கட்டிய ஆடையைக் கூட இழந்து அவதியுற்ற நளன் எந்த இடத்திலும் மனம் கலங்கவில்லை. சிவத்தலமான திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றான். நளனின் வேண்டுகோளுக்கு இணங்கி, சனீஸ்வரர் இங்கு தங்கினார். சனிக்குரிய திசை தெற்கு. ஆனால் இங்கு கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

எப்படி செல்வது * காரைக்காலில் இருந்து 5 கி.மீ.,

* மயிலாடுதுறையில் இருந்து 33 கி.மீ.,

கல்பட்டு விஸ்வரூப சனீஸ்வரர்

விழுப்புரம் அருகிலுள்ள கல்பட்டு கிராமத்தில், 21 அடி உயர விஸ்வரூப சனீஸ்வரர், இடது காலை தரையில் வைத்து, பிரமாண்டமான காகத்தின் மீது வலது காலை ஊன்றிய நிலையில் இருக்கிறார். இவரை சனிக்கிழமையில் வழிபட்டால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அஷ்டமத்துச்சனி தோஷம் நீங்கும்.

எப்படி செல்வது

விழுப்புரம் - திருக்கோவிலுார் சாலையில் 15 கி.மீ., துாரத்தில் மாம்பழபட்டு கிராமம். இங்கிருந்து பிரியும் சாலையில் 1 கி.மீ.,

திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர்

மனிதர்கள் செய்யும் நன்மை, தீமைக்கு ஏற்ப பாரபட்சம் பார்க்காமல் சனீஸ்வரர் பலன் கொடுப்பார்.

ஆனால் சனியால் கிடைக்கும் நன்மை கண்டு மகிழாமல், தீமையை மட்டுமே எண்ணி முன்பு பயந்தனர். இதனால் அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. திருக்கொள்ளிக்காட்டில் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் சனிபகவான்.'பொங்கு சனியாக' அவரை சிவபெருமான் மாற்றினார். இவரே இங்கு தனி சன்னதியில் இருக்கிறார். 'உழைப்பவருக்கே அருள்புரிவேன்' என்னும் தத்துவத்தின் அடிப்படையில் கலப்பை ஏந்தியபடி இருக்கிறார்.

எப்படி செல்வது  திருவாரூர் - திருத்துறைபூண்டி சாலையில் கச்சனம் வழியாக 28 கி.மீ.,

சோழவந்தான் சுயம்பு சனீஸ்வரர்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மேற்கு நோக்கி சனீஸ்வரர் இருக்கிறார். 500 ஆண்டு பழமையான இக்கோயிலின் தலவிருட்சம் மாவலிங்க மரம். இது விசாக நட்சத்திர பரிகார தலம். சனிதிசை, சனி புத்தி, ஏழரை, அஷ்டமச்சனியால் அவதிப்படுபவர்கள் சனிக்கிழமை எள், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி ஒன்பது முறை வலம் வருகின்றனர்.

எப்படி செல்வது:  மதுரையில் இருந்து 25 கி.மீ.,

குச்சனுார் சனீஸ்வரர்

மன்னரான தினகரன் குழந்தை வரம் பெற விரதம் மேற்கொண்டார். ''அந்தணச் சிறுவன் ஒருவன் உன் வீட்டுக்கு வருவான். அவனை வளர்த்து வா. பிறகு உனக்கும் குழந்தை பிறக்கும்'' என அசரீரி கேட்டது. அதன்படி அந்த சிறுவனுக்கு 'சந்திரவதனன்' என பெயரிட்டு வளர்த்தார். பின்னர் மன்னருக்கும் குழந்தை பிறக்க, 'சதாகன்' என பெயரிட்டார். எனினும் வளர்ப்பு மகன் சந்திரவதனனுக்கு முடி சூட்டினார். இந்நிலையில் மன்னருக்கு ஏழரைச்சனி பிடித்தது. தந்தை மீது அன்பு கொண்ட சந்திரவதனன், இரும்பால் சனீஸ்வரர் உருவம் செய்து, ' உத்தமரான என் தந்தைக்கு தரும் துன்பத்தை எனக்கு கொடு'' என்று வேண்டினான். சனீஸ்வரர் அவனது தியாகத்தைப் பாராட்டி, ஏழரை நாழிகை மட்டுமே பீடித்து விலகினார். சந்திரவதனன் குச்சுப்புல்லால் கூரை வேய்ந்து, சனீஸ்வரருக்கு கோயில் எழுப்பினான். இதனால் குச்சனுார் எனப்படுகிறது. சனீஸ்வரர் இங்கு லிங்க வடிவில் உள்ளார்.

எப்படி செல்வது: தேனியிலிருந்து 30 கி.மீ.,

லோக நாயக சனீஸ்வரன் கோயில்

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியகுளம் எனும் ஊரில் லோக நாயக சனீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இங்கு உலோகத்தினால் ஆன சனீஸ்வரின் சிலை மூலவராக அமைந்துள்ளது.

இலத்துார் பொங்குசனி

இலத்துார் மதுநாதசுவாமி கோயிலில் பொங்கு சனீஸ்வரர் சன்னதி உள்ளது. வழிபடுவோருக்கு அபயம் அளிப்பவராக அபயஹஸ்த நிலையில் இருக்கிறார்.

எப்படி செல்வது:  தென்காசியில் இருந்து சாம்பவர் வடகரை செல்லும் சாலையில் 6 கி.மீ.,

ஸ்ரீவைகுண்டம் சனீஸ்வரர்

துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. கைலாசநாதருக்கும், சனீஸ்வரருக்கும் சிறப்பு பூஜை செய்கின்றனர். சனி திசை, சனி புத்தி காலத்தில் இழந்த சொத்தை மீண்டும் கிடைக்க எள்தீபம் ஏற்றுகின்றனர். திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்கு ஈடாக விளங்கும் இத்தலம் நவகைலாய தலங்களில் ஒன்றாகும்.

எப்படி செல்வது: திருநெல்வேலி - திருச்செந்துார் சாலையில் 30 கி.மீ.,

சிங்கனாப்பூர் சனிபகவான்

மகாராஷ்டிரா மாநிலம் சிங்கனாப்பூரில் சனிபகவான் கோயில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கனமழையால் இங்குள்ள பனாஸ்னாலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது பெரிய கல் ஒன்று ஒதுங்கியது. கிராமத்தினர் சிலர் அதில் ரத்தம் வருவதைக் கண்டனர். அன்றிரவு கிராம தலைவரின் கனவில் தோன்றி, கல் வடிவில் வந்திருக்கும் தன்னை பிரதிஷ்டை செய்து வழிபடும்படி சனிபகவான் தெரிவித்தார். அதன்படி ஐந்தடி உயர சுயம்பு சனிபகவான் வழிபாடு இங்கு தொடங்கியது. இக்கோயிலுக்கு மேற்கூரை, சுற்றுச்சுவர் இல்லை. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கூடுகின்றனர். நல்லெண்ணெய், கறுப்பு உளுந்து படைத்து வழிபடுகின்றனர்.

எப்படி செல்வது:

ஷீரடியில் இருந்து 60 கி.மீ., பூனாவில் இருந்து 160 கி.மீ., மும்பையில் இருந்து 265 கி.மீ. தொலைவில் சிங்கனாப்பூர் உள்ளது

திருகோணமலை சனீஸ்வரன் ஆலயம்

இலங்கையில் சனீஸ்வரன் ஆலயம் திருகோணமலை நகரத்தின் மடத்தடி என்றழைக்கப்படும் இடத்தில் ஸ்ரீ கிருஸ்ணன் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இவ்வாலயம் 1885 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது.

தொகுப்பு

மோகனா செல்வராஜ்