வெள்ளிக்கிழமைகளில், அம்பாள் வழிபாடு லலிதா சகஸ்ரநாமம்


வெள்ளிக்கிழமைகளில், அம்பாள் வழிபாடும் அம்பாளுக்கான ஆராதனைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதேபோல, உக்கிர தெய்வமான துர்காதேவிக்கு, ராகுகாலத்தில் விளக்கேற்றுவதும் பலம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அம்பாள் என்பவள் சக்தி. மகாசக்தி. அந்த சிவத்துக்கே சக்தியெனத் திகழ்பவள். அதனால்தான் லோகமாதா என்று தேவியைப் போற்றுகிறது புராணம். 

அம்பாள் கருணையே வடிவானவள். யாரெல்லாம் அவளைச் சரணடைகிறார்களோ, அவளை ஒருபோதும் கைவிடாதவள். நம்மைப் பெற்றெடுத்த தாயைப் போல கருணையே உருவானவள்’ என்று சிலாகிக்கிறது புராணம்.

தேவி உபாஸனை என்றே இருக்கிறது. வழிபாடுகளில், சக்தி உபாஸனை என்றே இருக்கிறது. பெண் தெய்வ வழிபாடு என்பது மிக மிக அளப்பரிய சக்தியைக் கொடுக்கக் கூடியது.

வெள்ளிக்கிழமை என்பது அம்பாள் வழிபாட்டுக்கு உரிய அற்புத நாள். அதிலும் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை என்பது இன்னும் சிறப்புக்கு உரிய நாள். அம்பாளைக் கொஞ்சி மகிழ்ந்து ஆராதித்து வழிபடக் கூடிய நாள்.

இந்த கார்த்திகை வெள்ளிக்கிழமையில், மாலையில் விளக்கேற்றுங்கள். வீட்டு வாசலில், விளக்கேற்றுங்கள். வாசலின் இரண்டு பக்கத்திலும் பூக்களை வைத்து அலங்கரியுங்கள். பூஜையறையில் அம்பாள் படங்களுக்கு செவ்வரளிப் பூ வைத்து அலங்கரியுங்கள்.

லலிதா சகஸ்ரநாமம் 

லலிதா சகஸ்ரநாமத்தில் என்ன விசேஷம் என்றால், ஒருமுறை கூப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது. 

லலிதா சகஸ்ரநாமத்தில் மட்டும் தான் தேவி ஸ்வரூபம், தோன்றிய வரலாறு,  அவளை வழிபட யந்திரம்,  மந்திர பரிவார தேவதைகளின் நிலை,  வழிபாட்டு முறை, அவள் அருளால் பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை வாக்தேவதைகளே கூறுவதால், வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.

"ஸ்ரீ மாதா" என்று அழைக்கப்படும் ஸ்ரீ லலிதையானவள், எப்படித் தோன்றினாள்? 

அசுரர்களின் இடையூறுகளையும், இன்னல்களையும் தாங்க முடியாமல், தேவர்கள், யாகம் வளர்த்து, அம்பாளை வேண்டி நின்றனர். 

அவளை வரவழைக்க, தங்களின் தேகத்தையே யாகத்தில் அர்ப்பணிக்கத் தயாரானார்கள். அப்பொழுது ஞானமாகிய குண்டத்திலிருந்து ஆதிசக்தியானவள் தோன்றினாள். 

சக்திகளுக்குள் ஸ்ரீ லலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லை என்று கூறுவார்கள். மந்திரங்களில், ஸ்ரீ வித்யையைப்போல், நகரங்களில் ஸ்ரீ புரம் போல், ஸ்ரீ வித்யை உபாசகர்களில் ஸ்ரீ சிவனைப்போல்,  சகஸ்நாமங்களில் லலிதா சகஸ்ரநாமம் போல் என்று மேன்மை வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. 

நமது முதுகுத் தண்டின் அடியில், கிண்ணம் போன்ற அமைப்பு உள்ளது. இதுதான் 'மூலாதாரம்'  என்று கூறப்படுகிறது. நாம் மனதை ஒருநிலைப்படுத்தி, சகஸ்ரநாமம் சொல்லும் பொழுது, நாபிக்கடியில் இருக்கும் சக்தியை, மந்திரத்தின் அழுத்தம் சீண்டி விடுகிறது. அந்த சக்தியானது, மேலே எழும்பி, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்யை, பிறகு சகஸ்ராரம் என்கிற கடைசி நிலையை வந்தடைகிறது. 

சகஸ்ராரம் என்னும் சிகரத்தில்தான் ஸ்ரீ சிவன் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

சகஸ்ராரத்தில், அதாவது சிகரத்தில், கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்தில் அமிழ்தம் உள்ளது. 

திருமீயச்சூர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம். இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார். 

அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ர நாமத்தினால்  திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார். 

இதனை தினமும் படித்து லலிதாம்பிகையை வழிபட சகல நலன்களும், செல்வச்செழிப்பையும் அடைவது உறுதி என்று கூறப்படுகிறது.

லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். அபிராமி அந்தாதி சொல்லுங்கள். அல்லது காதால் கேட்டுக்கொண்டு, அம்பாளை வணங்குங்கள். 

லலிதா சகஸ்ரநாமம் படிப்பதால், கங்கை போன்ற புண்ணிய நதிகளில் முறைப்படி நீராடுதல், அவிலிங்க க்ஷேத்திரத்தில், கோடி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்தல், அஸ்வமேத யாகம் செய்தல், அன்னதானம் செய்தல், இவையெல்லாவற்றையும் விட மேன்மையானது என்று கூறப்படுகிறது. 

இப்பொழுது புரிகிறதல்லவா? நாம் ஏன் லலிதா சகஸ்ரநாமத்தை சிரத்தையுடன் கூறவேண்டும் என்பதை? 

விழிப்பு நிலை, உறக்க நிலை இரண்டிலுமே நம்முடன் தேவி எப்பொழுதுமே இருக்கிறாள். வாக்தேவிகள் மொழிய, ஸ்ரீ ஹயக்ரீவரால் தெளியப்படுத்தப்பட்ட ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தினை நாம் அனுதினமும் நவிலுவோம். நிறைவான வாழ்வினைப் பெறுவோம்

அம்பாள் என்பவள் சக்தி. மகாசக்தி. அந்த சிவத்துக்கே சக்தியெனத் திகழ்பவள். அதனால்தான் லோகமாதா என்று தேவியைப் போற்றுகிறது புராணம்.

அபிராமி அம்பாள், கற்பகாம்பாள், காமாட்சி அம்பாள், காளிகாம்பாள்,  கருமாரித் தாய்,  அன்னை அகிலாண்டேஸ்வரி, மீனாட்சியம்மை,  காந்திமதி அன்னை, கோமதிஅன்னை, பிரஹன் நாயகி அன்னை என்று எத்தனையோ ரூபங்களுடனும் திருநாமங்களுடனும் திகழ்ந்தாலும் அம்பாள் என்பவள் மகா சக்தியாகவும் உலகாளும் சக்தியாகவும் போற்றப்படுகிறாள். கொண்டாடப்படுகிறாள். ஆராதிக்கப்படுகிறாள். வணங்கப்படுகிறாள். பூஜிக்கப்படுகிறாள்.

இல்லத்தில் சுபிட்சத்தை மலரச் செய்வாள். தம்பதி இடையே ஒற்றுமையை மேம்படுத்தி அருளுவாள். வாழ்வில் சந்தோஷமும் அமைதியும் மலரச் செய்வாள் அம்பிகை. 

அகிலத்தையும் காத்தருளும் அம்பிகை, நம்மையும் நம் குடும்பத்தையும் காத்தருளுவாள். 

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்

திருச்சிற்றம்பலம்

நன்றி. 

பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்