மார்கழி மாத சிறப்பு பதிவுகள்-திருப்பாவை
நமது உண்மை செய்திகள் ஆன்மீக குழுவிலிருந்து மார்கழி மாத சிறப்பு பதிவுகள் :
திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும்.
ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்.
வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.
வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக கருதப்படுகிறார்.
ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமை, தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக அனைவராலும் போற்றப்படுகின்றது.
இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது.
இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.
தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர்.
இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர்.
இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந்நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.
இதன் இரண்டாம் பாடல், நெய் உண்ணமாட்டோம், பால் அருந்த மாட்டோம் என எவ்வித உணவு வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், தீக்குறளை (தீயதான கோள் சொல்லாதிருக்கையும்) , பிச்சை முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந்நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது.
மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது.
நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும், வயல்களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும், பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும், எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் துயில் எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.
வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு.
தமிழில் புனையப்பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும்.
மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை.
திருப்பாவையின் சிறப்பு முதன்மையாக அதன் பக்திப் பெருக்கு மட்டுமல்ல. பாற்கோவை முழுதும் விரவிக் கிடக்கும் கோதை மாதவன் பாற்கொண்ட தூய காதலமுதம் மற்றும் அதன் விளைவாய் அடியவருக்கும் அனைவருக்கும் அரும்பெரும் வரமாகக் கிடைத்த தமிழ் மணம்.
திருப்பாவையின் இந்த முச்சுவையும் தித்திக்கும் பாக்களில் இரண்டொன்றைக் கீழே காணலாம்:
கோதை நமக்கு அளிக்கும் பக்திச் சுவையைக் காணலாம். ஓரே அடிகொண்டு உலகையே அளந்த பரந்தாமனின் புகழைப் பாடுவதனாலேயே புவியோர் தமது துன்பம் நீங்கி இன்புற்றிருக்க இயலும் என இப்பாடலின் மூலம் இயம்புகிறாள் கோதை:வைணவத்தாரோ வேற்று மதத்தினரோ, அன்றி இறை நம்பிக்கை அற்றவரே ஆயினும், கோதையின் தீஞ்சுவைத் தமிழுக்கு அடிமையாகாது இருத்தல் அரிது. திருப்பாவைப் பாடல்கள் அவற்றைப் படிக்கையிலேயே சித்திரப் பண்பு (picturesque quality) பெறுகின்ற பேரானந்தம் அளிப்பவை. இதற்கு எடுத்துக் காட்டாக, மழையைப் பற்றிய இப்பாடலைப் படிக்கையில், வானின்றும் மண்ணில் வீழும் மழையை நேராகவே காண்பது போன்ற ஒரு அனுபவம் பெறலாம்:
தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.
மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்
நன்றி.
பக்தியுடன் மோகனா செல்வராஜ்