மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகள் என ஒரு ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு கதை இருக்கிறது. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைக்கின்றனர். அதனால்தான், ஏகாதசி அன்று புகழ்பெற்ற பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் என்று கூறபடுகிற சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏகாதசி விரதம் இருக்க விரும்புபவர்கள் முழு நாளும் விரதம் இருந்து விஷ்ணுவை நினைத்து தியானிக்க வேண்டும். மகாவிஷ்ணு பெருமாளின் புகழ்பாடும் பிரபந்தப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஏகாதசி அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து இறைவனை துதி செய்ய வேண்டும். பிறகு மறுநாள் காலை துவாதசி அன்று, மகாவிஷ்ணு பெருமாளின் நாமத்தை சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்களும் விரதம் இருப்ப வர்களின் சிந்தனையில், இறைவனின் நினைப்பு மட்டுமே இருக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் தங்கள் பணிகளைச் செய்யும் வேளைத் தவிர மற்ற நேரங்களில் இறைவனின் புகழை பாடியபடியே இருக்க வேண்டும்.
ஏகாதசி அன்று பெருமாள் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். அல்லது அவர்கள் வீட்டில் இருந்தபடியே பகவானின் படத்திற்கு மலர் அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம்.
பக்தர்கள் இந்த வழிபாட்டை மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். பகைவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் முக்திக்கான வழியை அடைவார்கள்.
அதனால், அனைவரும் ஏகாதசி விரதம் இருந்து பெருமாளின் அருளைப் பெற்று வாழ்வில் ஏற்றம் காணுங்கள்
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பிரளய காலம் முடிந்து உலகைப் படைக்க முற்பட்ட திருமால், தனது உந்தித் தாமரையில் நான்முகனான பிரம்மாவைப் படைத்தார்.
அந்தப் பிரம்மாவுக்கு வேதங்களை உபதேசித்த திருமால், அந்த வேதங்களை ஓதி, வேத ஒலிகளின் துணையோடு உலகைப் படைக்குமாறு பிரம்மாவுக்குக் கட்டளை இட்டார்.
ஆனால், தானே உலகையெல்லாம் படைப்பவன் என்ற கர்வம் பிரம்மாவுக்கு வந்துவிட்டது. அந்த கர்வத்தைப் போக்க நினைத்த திருமால், மது, கைடபன் என்ற இரண்டு அசுரர்களை உருவாக்கிப் பிரம்மாவிடம் அனுப்பிவைத்தார்.
மது, கைடபன் இருவரும் பிரம்மாவிடம் விளையாடுவது போல் விளையாட்டுக் காட்டிவிட்டு, பிரம்மாவிடம் இருந்த வேதத்தை அபகரித்துச் சென்றுவிட்டார்கள்.
வேதத்தை இழந்த நிலையில், தான் முன்பு கர்வத்தோடு இருந்ததை எண்ணி வருந்தினார் பிரம்மா. இழந்த வேதத்தைத் திருமாலே வந்து மீட்டுத் தர வேண்டும் என்று திருமாலிடம் பிரார்த்தனை செய்தார்.
அப்போது திருமால் குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக அவதரித்து, மது-கைடபர்களை வதைத்து, வேதங்களை மீட்டுப் பிரம்மாவிடம் வழங்கினார். அந்த வேத கோஷத்துடன் மீண்டும் படைப்புத்தொழிலைத் தொடங்கினார் பிரம்மா.
திருமாலால் வதைக்கப்பட்டு இறக்கும் தறுவாயில் இருந்த மது கைடபர் இருவரும், தங்களுக்கு முக்தியளிக்குமாறு திருமாலிடம் பிரார்த்தித்தார்கள். “வரும் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று உங்களுக்கு முக்தி அளிக்கிறேன்!” என்று அவர்களுக்கு வாக்களித்தார் திருமால்.
அவ்வாறே மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, மது-கைடபர்களுக்காக வைகுண்டத்தின் வடக்கு வாசலைத் திறந்து அவ்விருவரையும் வைகுண்டத்துக்குள்ளே அழைத்துச் சென்றார் திருமால். இவ்வாறு வைகுண்ட வாசலைத் திறந்து மது- கைடபருக்கு முக்தியளித்த ஏகாதசி என்பதால், வைகுண்ட ஏகாதசி என்று இந்நாள் அழைக்கப்படுகிறது.
“நாங்கள் முக்தியடைந்த இந்நாளில், யாரெல்லாம் உனது ஆலயங்களில் உள்ள வடக்கு வாசல் வழியாக வந்து உன்னைத் தரிசனம் செய்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் நீ முக்தியளிக்க வேண்டும்!” என்று மது கைடபர்கள் பிரார்த்திக்க, அதை ஏற்று அருள்புரிந்தார் திருமால். அதனால் தான் வைகுண்ட ஏகாத-சியன்று, அனைத்துப் பெருமாள் கோவில்களிலும் வடக்குப் புறத்தில் உள்ள வைகுண்ட வாசல் திறக்கப்படுகிறது. வைகுண்டத்தின் வாசலைத் திறந்து மது- கைடபர்களுக்கு முக்தி அளித்ததுபோல், அந்த வைகுண்ட வாசல் வழியாக வந்து தன்னை வணங்குவோர் அனைவருக்கும் திருமால் பக்குவத்தை அளித்து, சரணாகதி மார்க்கத்துக்கு இட்டுச் சென்று முக்தியளிப்பார்.
ஏகாதசி விரதம்:
விரதங்களுக்குள் தலையாயது ஏகாதசி விரதம். வருடத்திலுள்ள அனைத்து ஏகாதசிகளிலுமே விரதம் இருப்பது சிறப்பானது. அதிலும் குறிப்பாக வைகுண்ட ஏகாதசி அன்று தண்ணீர் கூட உட்கொள்ளாமல் விரதம் இருப்பது மிகவும் விசேஷமானதாகும். அவ்வாறு விரதம் இருக்க இயலாதவர்கள், பால் பழம் பலகாரங்களை உட்கொள்ளலாம்.
வைகுண்ட ஏகாதசி அன்று காலை எழுந்து நீராடி விட்டு, வீட்டில் உள்ள பெருமாளுக்குப் பூஜைகள் செய்ய வேண்டும். பஜனை பாடுதல், தோத்திரங்கள் படித்தல், புராணங்கள் வாசித்தல், இறைவனின் கதைகளைக் கேட்டல் உள்ளிட்ட நற்செயல்களில் அன்றைய பொழுதைக் கழிக்க வேண்டும். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று, சுவர்க்க வாசல் என்று பொதுவாகச் சொல்லப்படும் வைகுண்ட வாசல் வழியாக நுழைந்து திருமாலைத் தரிசிக்க வேண்டும். மறுநாள், துவாதசியன்று காலை நீராடிப் பூஜை செய்து விட்டு, பெருமாளின் தீர்த்தத்தை உட்கொண்டு, அதன்பின் அகத்திக்கீரை, சுண்டைக்காய், நெல்லிக்காய் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய உணவுகளை உட்கொண்டு விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு விரதத்தை நிறைவு செய்வதற்கு துவாதசி பாரணை என்று பெயர்.
துவாதசி பாரணை விதிகள்:
ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்பவர்கள், மறுநாளான துவாதசியன்று எத்தகைய உணவை உட்கொண்டு விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கான சில விதிகள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன:கட்டாயம் உண்ண வேண்டியவை: 1. அகத்திக்கீரை, 2. நெல்லிக்காய், 3. சுண்டைக்காய்.
விலக்க வேண்டியவை:
1. வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு என வாழை தொடர்புடைய அனைத்தையும் துவாதசியன்று விலக்க வேண்டும். வாழை இலைக்குப் பதிலாகப் பாக்கு மட்டை தட்டிலோ, தாமரை இலையிலோ, புரசை இலையிலோ உணவு உட்கொள்ளலாம்.
2. கத்திரிக்காய், புடலங்காய், பாகற்காய் ஆகிய காய்கறிகளை துவாதசி நாளில் உட்கொள்ளக் கூடாது.
3. கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகிய பருப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
4. கடுகு, மிளகாய், அனைத்து விதமான கடலைகள், கொத்தமல்லி, தனியா, புளி ஆகியவற்றையும் விலக்க வேண்டும்.
5. எள், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றையும் விலக்க வேண்டும். நெய்யிலோ தேங்காய் எண்ணெயிலோ பொரித்துக் கொள்ளலாம்.
6. பிரம்மச்சாரி யாரேனும் இருந்தால், அவருக்கு முதலில் உணவளித்துவிட்டு அதன்பின் பாரணை செய்ய வேண்டும்.
இந்த விதிகளின்படி துவாதசி பாரணையை மட்டும் சரியாகச் செய்தாலே ஏகாதசி விரதம் அனுஷ்டித்ததற்கு நிகரான பலனுண்டு என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்து திருமாலை வழிபடுவோர்க்கு, மனம் பக்குவம் அடைந்து, சரணாகதி நிலை உண்டாகி, அதன் விளைவாக வைகுண்டப் பதவி கிட்டும்..
தொகுப்பு
மோகனா செல்வராஜ்