சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம்

 ஆருத்ரா தரிசனத்தையொட்டி தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 

கடலூர் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற சிவாலயம் தில்லையம்பலம் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில். பரதம் என்னும் நாட்டியக் கலையை தோற்றுவித்த நாயகரான நடராஜர் நாட்டியமாடும் கோலத்தில் இருக்கும் தலம். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும், பஞ்சசபைகளில் பொற்சபையாகவும் பக்தர்களால் போற்றப்படுகிறது. பூலோக கைலாயம் என்றும் அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.


நடராஜருக்கு அபிஷேகம் உத்தரகோசமங்கையில் நேற்று காலை நடராஜருக்கு சாத்தப்பட்டு இருந்த சந்தன காப்பு களையப்பட்டது. நேற்று இரவு 11 மணிக்கு மேல் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். நடராஜருக்கு 32 வித அபிஷேகங்கள் செய்யப்பட்டு இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. 

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கற்பகவல்லி தயார் பொன்னூஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்தார். இன்று அதிகாலையில் சிறப்பு அபிஷேகமும் ஆருத்ரா தரிசன காட்சியும் நடைபெற்றது. 

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரை உற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்கள் கொண்டாடப்படும் 

இவ்விழாவின் முக்கிய அம்சமாக நடராஜர், சிவகாமி அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. 

அதைத்தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருப்பூர் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் ஆடல்வல்லானுக்கு 32 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது.