தொண்டனும்... தலைவனும்... கட்சியினரோடு மதிய உணவு சாப்பிட்ட ஸ்டாலின்

 

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினரோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தல் பிரச்சார வியூகம் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய ஸ்டாலின், அவர்களுக்காக பிரத்யேக முறையில் மதிய விருந்தளித்து உபசரித்துள்ளார்.

வழக்கமாக ஹோட்டல்களில் ஆர்டர் கொடுக்கும் திமுக தலைமைக்கழக அலுவலர்கள், இந்த முறை பிரத்யேகமாக கேட்டரிங் சர்வீஸ் மூலம் ஹைஜீனிக் முறையில் மதிய உணவு சமைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் அக்கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

அந்தக் கூட்டம் நிறைவடைந்ததும் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் அனைவரும் இருந்து சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இன்று சண்டே என்பதால் நான் வெஜ் சாப்பிடுவதற்காக வெளியில் உள்ள ஹோட்டல்களுக்கு செல்ல கார் பார்க்கிங் பகுதியை நோக்கி படையெடுத்த நிர்வாகிகள் அடுத்த சில நிமிடங்களில் யு டர்ன் அடித்து விருந்து நடைபெறும் இடத்தில் குவியத் தொடங்கினர். 

காரணம் அங்கு ஸ்டாலின் நின்று கொண்டு பந்தியில் அமர்ந்திருந்தவர்களை பார்த்து பார்த்து கவனித்தது தான்.

இவருக்கு சாம்பார் கொண்டு வாருங்கள், பொறியல் வையுங்கள் என ஸ்டாலின் உபசரித்ததை கண்டு திமுக நிர்வாகிகள் திக்கு முக்காடி போகினர். 

இன்னும் கூடுதல் சிறப்பாக கட்சியினரோடு மதிய உணவு சாப்பிட அமர்ந்தார் ஸ்டாலின். இது அங்கிருந்த நிர்வாகிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு இன்ப அதிர்ச்சியும் அளித்தது.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் யார் எந்தவொரு நிகழ்ச்சி நடத்தினாலும் உள்ளே நான் வெஜ்க்கு அனுமதியில்லை. 

சைவம் தான் இடம்பெறும். அந்த வகையில் திமுக நிர்வாகிகளுக்கு சைவ விருந்துதான் தரப்பட்டது. ஆனால் அந்த சைவ விருந்தில் காலிபிளவர் சில்லி, பேபிகார்ன் ப்ரை, பாயாசம், கூட்டு, பொறியல் என பல வகைகள் வரிசை கட்டி நின்றது.

திமுக நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாக சரவண பவனில் தான் ஆர்டர் கொடுக்கப்படும். கொரோனா காலம் என்பதால் ஹோட்டல் ஆர்டரை தவிர்த்து பிரத்யேகமாக சமையலுக்கு ஆட்களை நியமித்து ஹைஜீனிக்கான முறையில் மதிய உணவு தயார் செய்யப்பட்டிருந்தது.