தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியலுக்கு உறுதியாக வருகிறேன் என்று சொன்ன ரஜினி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கினார். சமீபத்தில் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என சமூகவலைதளங்களில் ஒரு பொய்யான அறிக்கை பரவியது.
அது எனது அறிக்கை அல்ல, ஆனால் அதில் சொல்லப்பட்ட விஷயம் என ரஜினி தெரிவித்தார். அதாவது உடல்நிலையை காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லாமல் சொன்னார்.
ரஜினியை எப்படியாவது அரசியலுக்குள் வர வைக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் ரஜினி அமைதியாகவே இருக்கிறார்.
இந்நிலையில் தீபாவளியான (நவ., 14) ரஜினி வீட்டு முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வீட்டினுள் இருந்தே ரசிகர்களை பார்த்து கை அசைத்த ரஜினி, ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினார். ரசிகர்களும் அவருக்கு தீபாவளி வாழ்த்து கூறினர்.
சிலர் இப்போதே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர். கூட்டத்தில் இருந்து குரல் கொடுத்த பலரும் அவரை அரசியலுக்கு வர சொல்லியே கத்தினர்.
பின்பு வீட்டில் தனது மனைவி லதா, மகள் சவுந்தர்யா, மருமகன் விசாகன், பேரன் வேத் ஆகியோருடன் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்
ரஜினி. அவர் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடிய போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.