கல்யாண வீட்டு பிரிஞ்சி சாதம்
சாதாரணமாகவே பிரிஞ்சி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு டிஷ் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.
அதிலும் குறிப்பாக கல்யாண வீட்டில் போடும் பிரிஞ்சு அட்டகாசமான சுவையில் இருப்பதை நாம் சுவைத்து பார்த்திருப்போம்.
நாம் வீட்டில் செய்தால் மட்டும் அந்த அளவிற்கு சுவையாக வருவதில்லை என்று பலமுறை வருத்தப்பட்டு இருப்போம்.
அப்படிப்பட்ட அருமையான சுவையில் கல்யாண வீட்டில் சாப்பிட்டதை போல நம் வீட்டிலும் எப்படி சமைக்கலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
வீட்டில ஒருமுறை செஞ்சி பாருங்க.
நாவில் எச்சில் ஊறவைக்கும் உணவு வகைகளுக்கும், பசிக்கும் ருசிக்கும் விருந்தே படைக்கும் உணவகங் களுக்கும் புகழ்பெற்ற நகரம் சென்னை. இங்கு நடைபெறும் திருமண விழாக்களில் கட்டாயம் பிரிஞ்சி இடம்பெறும்.
கல்யாண வீட்டு பிரிஞ்சி செய்ய தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 2, தக்காளி – 2, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு – தலா ஒரு கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், தேங்காய் பால் – 1 பங்கு, பாஸ்மதி அரிசி – 2 ஆழாக்கு, பட்டை, கிராம்பு மசாலா பொருட்கள், நெய் – தேவையான அளவிற்கு, பச்சை மிளகாய் – 3, மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1/4 டீஸ்பூன், பிரட் – 3 துண்டு, முந்திரி – 1, எழுமிச்சை சாறு – 1 டீஸ்பூன், புதினா இலைகள் – கைப்பிடி அளவு.
கல்யாண வீட்டு பிரிஞ்சி செய்முறை விளக்கம்:
முதலில் கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாஸ்மதியை கழுவி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக உங்கள் வசதிக்கு ஏற்ப வெட்டிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு நெய் சேர்த்து கொள்ளுங்கள். பிரிஞ்சி செய்வதற்கு எப்போதுமே எண்ணெயை விட நெய் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
பட்டை, கிராம்பு, அண்ணாச்சி பூ, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை போன்றவற்றை தலா ஒன்று என்ற எண்ணிக்கையில் எடுத்து சேர்த்துக் கொள்ளவும்.
இவைகள் நன்கு வறுபட்டதும் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் பச்சை மிளகாயை முழுதாக அப்படியே போட வேண்டும். இப்போது தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இவைகள் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் அதிகம் சேர்த்தால் நன்றாக இருக்கும். பச்சை வாசம் போனதும் கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்க வேண்டும்.
பின்னர் கைப்பிடி அளவுக்கு புதினா இலைகளை சேர்த்து கொள்ளவும். மசாலா வாசனை போக நன்கு வதங்கி வந்ததும் ஒரு பங்கு தேங்காய் பால், இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்க வேண்டும்.
தண்ணீர் கொதித்து வந்ததும் அரிசி சேர்த்து ஒரு டீஸ்பூன் லெமன் ஜூஸ் விட்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி கொள்ளவும். இரண்டு விசில் வரும் வரை மூடி வைத்து எடுக்கவும். இரண்டே விசிலில் பொலபொலவென பிரிஞ்சி சாதம் சூப்பராக வெந்து வந்திருக்கும்.
இப்போது தனியே ஒரு வாணலியில் சிறிதளவு நெய் விட்டு அதில் முந்திரி பருப்புகளை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே நெய்யில் பிரட் துண்டுகளை சிறிய வில்லைகளாக வெட்டி பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
இவைகளை பிரிஞ்சி சாதத்துடன் கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க சுவையான, வாசமான கல்யாண வீட்டில் நாம் சுவைத்த அதே மறக்க முடியாத பிரிஞ்சி இப்போது தயாராகி விட்டது.
நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இது போல் ஒரு முறை செய்து கொடுத்து அசத்தி பாருங்கள்.
இப்போது கல்யாண வீட்டு பிரிஞ்சி சாதம் தயார்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா