மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது மருத்துவர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நிவர் புயல் காரணமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு சென்னை வர இயலாமல் உயிரிழந்தார்.
சுபம் உபாத்யாவுக்கு 30 வயது. மத்தியப் பிரதேசத்தில் கரோனா சிகிச்சை வார்டில் சுறுசுறுப்பாக சுழன்று கொண்டிருந்த இளம் மருத்துவர். அவருக்கு கடந்த அக்டோபர் 28-ம் தேதி கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
பந்தல்கண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவரின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. 96% நுரையீரல் செயலிழந்தது. இதனையடுத்து அவர் கடந்த 10-ம் தேதி சிரயு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழியென்றனர்.
கரோனா தொற்றால் நுரையீரல் மோசமாகப் பாதிப்படைந்த நிலையில், சென்னையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், நிவர் புயலால் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் அவரை சென்னை கொண்டு செல்ல இயலாமல் போனது. நிவர் புயலால் விமான சேவை நேற்று ரத்தானது. இந்நிலையில், இளம் மருத்துவர் சுபம் உபாத்யா பரிதாபமாக இறந்தார்.