கோவிந்தராஜ பெருமாள் சயன கோல தத்துவம்-திருநீர்மலை - மாணிக்க சயனம்

 


கோவிந்தராஜ பெருமாள் சயன கோல தத்துவம்-திருநீர்மலை - மாணிக்க சயனம்


மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் 274 தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும்.


மேலும் இனி பிறவி வேண்டாம் போதும் என்று கருதினால் அதை நிறுத்திக்கொள்ளக் கூடக்கூடிய வாய்ப்பும் மனிதப் பிறவிக்கு மட்டுமே சாத்தியம்.


மற்ற பிறவிகளில் அது சாத்தியமில்லை. காரணம் மனிதப் பிறவிக்கு உள்ள பல்வேறு தனித்தன்மைகளில் ஒன்றான ‘இறைபக்தி’.


வயதாகி முதுமை வந்தால் தான் இது போல திருத்தலங்களை தரிசிக்க வேண்டும் என்கிற கருத்து பலரிடம் உள்ளது.


அது தவறு. தவறு. தவறுக்கும் தவறான தவறு. இந்த சரீரம் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் போதே புண்ணிய ஷேத்ரங்களையும் திருத்தலங்களையும் தரிசித்துவிடவேண்டும்.


ஸ்ரீரங்கம் - வீர சயனம்
மகாபலிபுரம் - தல சயனம்
திருமயம் - போக சயனம்
திருக்கோஷ்டியூர் - பால சயனம்
கும்பகோணம் - உத்தான சயனம்


திருநீர்மலை - மாணிக்க சயனம்
திருவனந்தபுரம் - அனந்த சயனம்
திருமோகூர் - பிரார்த்தனா சயனம்
திருப்புல்லாணி - தர்ப்ப சயனம்
திருச்சித்திரக்கூடம் - போக சயனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் - வடபத்திர சயனம்



தல வரலாறு

     ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி இவ்வழியே சென்றனர். அவர்களுக்கு பெருமாளின் சயனக்கோலம் கண்களை விட்டு அகலவே இல்லை. மீண்டும் ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினர்.


எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என உருக்கமாக பெருமாளை வேண்டினர். அப்போது சுவாமி “போக சயனத்தில்” அரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தார்.


இவரே இங்கு மலைக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். அருகில் பிருகு, மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர்.


 பாரதப்போர் முடிஞ்சு ஏகப்பட்ட உயிர்களை 'மேலே' அனுப்பிய பாவம் போக்க , அர்ஜுனன் தவம் செய்ய வந்த இடம் இது. வரும்போதும் காண்டீபத்தைத் தூக்கி வந்துருப்பான் போல!


காண்டீபன் வந்த அடையாளமா இதுக்கு காண்டீப வனம் என்ற பெயர் வந்துருக்கு. இங்கே இருக்கும் மலைதான் தோதாத்ரி. தோதா + அத்ரி. இந்த தோதா என்பது தோயா என்பதன் மரூவு. தோயா என்றால் தண்ணீர். அத்ரி என்றால் மலை. தண்ணீர் சூழ்ந்த மலை(ப்பகுதி). நீர்மலை!


கோவில் அமைப்பு

     காண்டவ வனத்தில் தோயாத்ரி மலைவாசல்னு அலங்கார நுழைவு வாசல் உள்ளது. நல்ல அகலமான படிக்கட்டுகள், ஒரே சீரான உயரமுடைய 200 படிகள் உள்ளன. பாதி தூரத்தில் வலப்பக்கம் பிரியும் இடத்தில் நான்கு படி இறங்கி எட்டிப்பார்த்தால் சிறியதாக ஆஞ்சநேயர் சந்நிதி ஒன்று உள்ளது.

     கோவில் முகப்பில் மூன்று நிலைக் கோபுரத்தின் முன் நான்கு தூண் கொண்ட மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி மற்றும் ’கல்கி’ சதாசிவம் தம்பதியர் கட்டிய மண்டபம். அவர்களின் திருமணம் இந்தக் கோவிலில் தான் நடந்தது.


பெருமாள் இங்கே சுயம்புவாக தோன்றியார். இது எட்டு சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்றாகும். மற்ற ஏழு சுயம்பு க்ஷேத்ரங்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, ஸாளக்ராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரி. சுயம்பு மூர்த்தி என்பதால் இங்கே மூலவருக்கு அபிஷேகம் இல்லை. கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் மட்டும் தைலக்காப்பு உண்டு. சாம்பிராணித் தைலம் மட்டும் பூசப்படுகிறது.


     பெருமாளின் பலவித சயனக்கோலங்களில் இங்கே மாணிக்க சயனம். 


தனிச்சந்நிதியில் தாயார் ரங்கநாயகி உள்ளார். உட்பிரகாரத்தில் பால நரசிம்மர் சந்நிதி உள்ளது. இவரைச் 'சாந்த நரசிம்மர்' என்றும் சொல்கிறார்கள்.


ஹிரண்யவதம் முடிந்ததும் கோபம் அடங்காமல் சிலிர்த்த உடலோடு நின்ற சிம்ஹத்தைக் கண்டு ப்ரஹலாதனுக்கு உள்ளூர நடுக்கம் ஏற்பட்டது.


பாலகன் முகத்தில் பயத்தைப் பார்த்ததும் 'ஐயோ! குழந்தையைப் பயப்பட வச்சுட்டேனே' என்று இரக்கம் தோன்ற, அவனுக்குச் சமமாக, அவனுக்கேற்ற உருவத்தில் தானும் குழந்தையாக மாறி இரண்டு கைகளுடன் இங்கே வீற்றிருக்கிறார்.


இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரைத் தரிசிக்கலாம்.


கிழக்கே உலகளந்தப் பெருமாள் சந்நிதி உள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவரை ஒட்டி த்ரிவிக்ரமன் உள்ளார். மகாபலியின் தலையில் மூன்றாவது அடி வைத்தவர். வைகாசி மாதம் திருவோண நக்ஷத்திர தினத்தில் இவருக்குத் தனி உற்சவம் நடத்தப்படுகிறது.


  இக்கோயிலில் மூலவர் அரங்கநாதர் மலைக்கோயிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சி தருகின்றனர்.


சுயம்புவுக்கு அபிஷேகம் இல்லாததால் அபிஷேகம், திருமஞ்சனமெல்லாம் உற்சவருக்குத்தான்.


கூடவே ஸ்ரீதேவி, பூதேவியர். ஆண்டாளம்மாவும் கூடவே இருப்பது விசேஷம். சித்திரை பிரம்மோத்சவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார்.


அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.


இத்தலத்தின் குளத்தில் நீராடி, பெருமாளை வழிபட்டால் நோய் விலகி நலம் உண்டாகும். அத்துடன் சித்தம் தெளிந்து சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.


குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டியும், திருமணத்தடை நீங்க பெண்கள் கிரிவலம் செய்தும் வழிபடுகின்றனர்.


வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்த பின் இங்கே வந்து ராமனை மனம் உருகப் பிரார்த்தனை செய்து ராமனின் கல்யாண உருவத்தைக் காட்ட வேண்ட அப்படியே எழுந்தருளினாராம்


இறைவன். ராமர் சீதை, லக்ஷ்மண, பரத சத்ருக்கனர் மட்டுமே உள்ள சந்நிதி இது. கல்யாணத்தின் போது அனுமன் இல்லையென்பதால் அனுமனுக்கு தனியாக மண்டபத்தில் ஒரு சிலை வைத்திருக்கிறார்கள்.


காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


சென்னை பல்லாவரதிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் மேற்கே உள்ளது. 'மாமலையாவது திருநீர்மலையே' என்று திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற பெருமாள் திருக்கோவில் இது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம் நமசிவாய 


ஓம் நமோ நாராயணாய


பக்தியுடன் மோகனா  செல்வராஜ்