சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 262 மாணவர்களில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று 2வது நாளாக கலந்தாய்வு தொடங்கியுள்ளன. இது கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில், 2020-21ம் கல்வி ஆண்டில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் 99 ஆயிரத்து 610 பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில் 57,215 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இந்தநிலையில், கடந்த 16ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது.
அப்போது, அரசு இட ஒதுக்கீடு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு பட்டியல், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல்கள் வெளியிடப்பட்டன.
இதைத்தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் 270 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 262 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் அரங்கத்தில் உள்ளே நுழையும் போதே அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு இடங்களை தேர்வு செய்து அதற்கான ஒதுக்கீட்டு ஆணை பெற்றனர்.
தொடர்ந்து கலந்தாய்வு முடிந்தபிறகு நேற்று மாலை மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரியவந்தது. இதில், 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.