கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு கொரோனா

 சமீபத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு, பரபரப்பை ஏற்படுத்திய அதிமுகவின் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. நேற்று முன்தினம் அவருக்கும், மனைவி சவுந்தரியாவுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் பிரபு எம்எல்ஏவுக்கு மட்டும் தொற்று இருப்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பிரபு எம்எல்ஏ தனது டிவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதால் கடந்த 2 தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.


இதையடுத்து அவரது தந்தை, கார் டிரைவர் மற்றும் வீட்டில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட 7 பேருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


இதேபோல புதுவை மாநிலம் மங்கலம் தொகுதி எம்எல்ஏ சுகுமாறனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.