சென்னை நிவர் புயல் மிரட்டி வரும் சூழலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துள்ளார்.
சென்னை பெரம்பூர், சூளை, கொளத்தூர், திருவிக நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
அப்போது ஸ்டாலினை சந்தித்த பலரும், மழைநீர் வடிகால் இல்லாததால் வீடுகளில் தண்ணீர் புகுந்து குடியிருக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக கண்ணீர்மல்க முறையிட்டனர்.
ஸ்டாலின் ஆய்வு
சென்னை மக்களை நிவர் புயல் ஒரு பக்கம் அச்சம் கொள்ள வைத்திருக்கிறது என்றால் மற்றொருபுறம் கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்து திகைக்க வைத்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. மேலும், சாலைகளில் மழைநீர் வடிகால் கால்வாய் இல்லாததால் சுமார் ஒன்றரை அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் களத்தில் இறங்கி பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். மழை கோட் அணிந்தவாறு ஆய்வு வந்த ஸ்டாலின் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்தே சென்று பல்வேறு இடங்களை பார்வையிட்டார். அப்போது அவரை சந்தித்த பொதுமக்களில் பலரும் மாநகராட்சிக்கு எதிரான தங்கள் ஆவேசத்தை கொட்டித்தீர்த்தனர்.
முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்ற நிலையிலும் கார் வேண்டாம் எனக் கூறி அதில் நடந்தே சென்றார் ஸ்டாலின். அவருடன் திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, ரவிச்சந்திரன், தாயகம் கவி ஆகியோரும் உடன் சென்றனர்.
அப்போது அவர்கள் ஒவ்வொரு பகுதியாக ஸ்டாலினை அழைத்துச்சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விளக்கினர்.
கருணாநிதியை பொறுத்தவரை ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இது போன்ற பேரிடர் காலங்களில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிடுவார்.
இந்நிலையில் ஸ்டாலினும் அதேபோல் களமிறங்கியிருக்கிறார். மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்