மதுரையில் தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டம், தல்லாகுளம், நவபத்கானா தெருவில் அமைந்துள்ள துணிக்டையில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், அக்கட்டடம் இடிந்து விழுந்த போது, அங்கு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயரமடைந்தேன்.
கடமையாற்றும் போது உயிரிழந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் கடமை உணர்வையும், தியாகத்தையும் பாராட்டி அவர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், தலா பதினைந்து லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்தும், மொத்தம் 25 லட்சம் ரூபாயும் மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் காயமடைந்த தீயணைப்பாளர்கள் கல்யாணகுமார் மற்றும் சின்னக்கருப்பு ஆகியோருக்கு அரசு நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாயும் வழங்கப்படும். அவர்களுக்கான மருத்துவ செலவை அரசே ஏற்கும். இவ்வாறு முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.