ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை


தி.மு.க.,வில், மீண்டும் சேரும் முயற்சியை, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி துவக்கி உள்ளார். அது முடியாமல் போனால், இம்மாத இறுதியில், கலைஞர் தி.மு.க., என்ற கட்சியை துவங்க உள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தீபாவளி பண்டிகையை ஒட்டி, நேற்று முன்தினம் அழகிரிக்கு, அவரது ஆதரவாளர்கள், தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.


அப்போது, அழகிரியும் தன்னுடன் பேசியவர்களிடம், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், என்ன முடிவு எடுக்கலாம் என்பது குறித்து, கருத்துக்கள் கேட்டுள்ளார்.


பின், 'மீண்டும் கலந்து பேசி, அடுத்தகட்ட முடிவை அறிவிக்கலாம்' என்றும், அவர்களிடம் அழகிரி கூறி உள்ளார்.இது குறித்து, அழகிரிஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:


தி.மு.க.,வில், மீண்டும் இணைய வேண்டும் என்றே, பெரும்பான்மையான ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பொதுச் செயலர் துரைமுருகன் வாயிலாக பேச்சு நடத்த, அழகிரி முயற்சி எடுத்து உள்ளார்.


எங்களை சேர்க்க, ஸ்டாலின் மறுத்தால், இம்மாத இறுதியில், கலைஞர் தி.மு.க., என்ற கட்சியை துவக்கவும், அவர் முடிவு செய்துள்ளார்.


தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஸ்டாலின் மீதான அதிருப்தியாளர்களையும், தன் ஆதரவாளர்களையும் சந்தித்து பேச உள்ளார். ரஜினி கட்சி துவக்கினால், அவருடன் அமைத்து, தேர்தலை சந்திப்போம்.ரஜினி வரவில்லை என்றால், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்போம். அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்தாலும், எங்களுக்கு எந்த நெருடலும் இல்லை.


மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டால், எங்களுக்கு ரொம்ப வசதியாக இருக்கும். பீஹார் பாணியில், தமிழக தேர்தலில், அமித் ஷா கவனம் செலுத்தும்போது, தி.மு.க, கூட்டணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.


ரஜினிக்கு அடுத்ததாக, அழகிரி கருத்துக்கு தான், ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தரும். தி.மு.க.,வில் அழகிரி குரல் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


உதயநிதி சுற்றுப்பயணத்தால்கட்சி நிர்வாகிகள் எரிச்சல்!தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:கொரோனா பரவல் காரணமாக, மாவட்ட சுற்றுப்பயணத்தை தவிர்த்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, கட்சி நிகழ்ச்சிகளில், ஸ்டாலின் பங்கேற்று வருகிறார்.சமீபத்தில், நாமக்கல் மாவட்டத்திற்கு, உதயநிதி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கருணாநிதி, ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை விட, உதயநிதிக்கு செலவு அதிகமாகி உள்ளது. இதனால், நிர்வாகிகள் எரிச்சல் அடைந்துள்ளனர்.


தொடர்ந்து, உதயநிதியை அழைத்து, பிரம்மாண்டமாய் நிகழ்ச்சி நடத்துமாறு, தலைமை வலியுறுத்துவதால், மாவட்ட செயலர்கள், வெளியே சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.


கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், கருணாநிதிக்கு பதிலாக, ஸ்டாலினை முன்னிலைப் படுத்தியதால், ஆட்சி அமைக்க முடியாமல்போனது.

அதேபோன்ற நிலைமை, 2021ல் உதயநிதியால் உருவாகி விடுமோ என்ற, அச்சம் காணப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தென்காசி மாவட்ட கோஷ்டி பூசல் தென் மண்டல தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் தீவிரமாக உள்ளது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஆலங்குளத்தில், நேற்று செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.

அதையொட்டி, முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆதரவாளர்கள், 'தென்காசியின் பசுமை நாயகியே, கட்சியின் வீரமங்கையே, ஆலங்குளத்தின் பொக்கிஷமே' என, போஸ்டர்கள் ஒட்டினர்.


அதில், மாவட்ட செயலர் சிவபத்மநாபன் பெயரை போடாமல் புறக்கணித்துள்ளனர். இதனால், பூசல் அதிகரித்துள்ளது.'முடிவு எடுக்க வில்லை'''ஆதரவாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அடிப்படையில், கட்சி துவக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்,'' என, தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.


தனியார், 'டிவி'க்கு, நேற்று அவர் அளித்த பேட்டி:கட்சி துவக்குவது குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை. விரைவில், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அவர்களின் கருத்துக்கள் அடிப்படையில், கட்சி துவக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.