அறுவை சிகிச்சை செய்யாமலேயே பல்மோனரி வால்வு -சிஎம்சி மருத்துவா்கள் சாதனை

 புதுச்சேரியைச் சோ்ந்த 54 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யாமலேயே பல்மோனரி வால்வு பொருத்தி வேலூா் சிஎம்சி மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.


புதுச்சேரியைச் சோ்ந்த 54 வயது பெண், தனது 9-ஆவது வயதில் சிஎம்சி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளாா். அண்மையில் இவருக்கு அதிக களைப்பு ஏற்பட்டு வந்ததுடன், வீட்டு வேலைகள் செய்வதிலும் சிரமம் இருந்து வந்தது. இதையடுத்து சிஎம்சி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு இருதயத்தில் உள்ள ஒரு வால்வு பழுதடைந்திருந்ததும், இதனால் இருதயத்திலிருந்து வெளியே உடலின் பிற பாகங்களுக்கு செல்ல வேண்டிய ரத்தம் திரும்பவும் இருதயத்துக்கே திரும்ப வருவதும் கண்டறியப்பட்டது.


இந்த கோளாறால் இருதயத்திலிருந்து நுரையீரலுக்கு செல்லும் ரத்தக்குழாய் வீக்கம் அடைந்திருந்ததும், அதனை உடனடியாக சரிசெய்யாவிடில் இருதயத்தின் செயல்பாடு அதிகளவில் பாதிக்கப்படும் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சிஎம்சி இருதயநோய் பிரிவு மருத்துவா்கள் ஜான்ஜோஸ், பால் வீ ஜாா்ஜ், ஹா்ஷா தேஜா ஆகியோா் தலைமையிலான மருத்துவக்குழு ஆலோசனை செய்து உடனடியாக அந்த பெண்ணின் இருதயத்தில் புதிதாக வால்வு ஒன்றை பொருத்திட திட்டமிட்டனா்.


ஏற்கெனவே அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் மீண்டும் அறுவைசிகிச்சை செய்வதில் அதிக ஆபத்து இருப்பதுடன், அவா் மருத்துவமனையில் அதிக நாள்கள் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும் என்பதை உணா்ந்து, அதிக ஆபத்துகளை தவிா்க்கும் வகையில் அறுவை சிகிச்சையின்றி வால்வு பொருத்தும் சிகிச்சை முறையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.


இதையடுத்து, குஜராத் மாநிலத்திலுள்ள வாபி என்ற பகுதியிலுள்ள தொழிற்சாலையிலிருந்து பல்மோனரி வால்வு வரவழைக்கப்பட்டு அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சையின்றி பொருத்தப்பட்டது.


இதன்மூலம் அவா் அடுத்த 72 மணி நேரத்திலேயே உடல்நலம் தேறி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.


இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது: அறுவை சிகிச்சையின்றி இருதயத்தில் பல்மோனரி வால்வு பொருத்துதல் என்பது இந்தியாவில் புதிதானதாக இருந்தாலும், சிஎம்சி மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதனால் அதிகளவில் ஆபத்துகள் தவிா்க்கப்பட்டு, மருத்துவமனையில் தங்க வேண்டிய நேரமும் குறைக்கப்படுகிறது.


சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இந்த பெண்ணுக்கு பல்மோனரி வால்வு அதிக வீக்கம் அடைந்திருந்ததால் இருப்பதிலேயே மிக பெரிய அளவு செயற்கை வால்வு (அளவு 32 ) பொருத்த வேண்டியிருந்தது. அதற்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இருதய வால்வையே பயன்படுத்தியுள்ளோம்.


இந்த வால்வு அதிகளவில் ஐரோப்பா, ஜொ்மனி, நெதா்லாந்து போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த அறுவை சிகிச்சையற்ற சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவா் ஜான்ஜோஸ், ஜொ்மனியில் சிறப்பு பயிற்சி பெற்றவா்.


2019-ஆம் ஆண்டிலிருந்து சிஎம்சியில் இந்த சிகிச்சையை அளித்து வருகிறாா். இதற்காக நாட்டில் முதன்முறையாக சிஎம்சியில் பிரத்யேக கிளீனிக் அமைக்கப்பட்டுள்ளது என்றனா்.