வருமானவரித்துறை சோதனை... நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பிரமுகர்


கோவையில் காளப்பட்டியில் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர்  பையா (எ) கிருஷ்ணன் வீட்டில் 3 நாட்களாக வருமானவரித்துறை  அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


ஈரோட்டில் உள்ள நந்தா கல்வி குழுமத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையின் ஒரு பகுதியாகவே பையா கவுண்டர் (எ)  கிருஷ்ணன் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது.


இன்று மூன்றாவது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், பையா கவுண்டருக்கு பிற்பகல் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.


இதனையடுத்து உடனடியாக காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு பையா கவுண்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட தகவலறிந்த ஏராளமான திமுக தொண்டர்களும் பொது மக்களும் தனியார் மருத்துவமனை முன்பாக கூடினர். இதன் காரணமாக பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.


இதனிடையே மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டிருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது சோதனையை நிறைவு செய்தனர். வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை மட்டும் அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.