சிறைவாசத்துக்கு பிறகு வி.கே.சசிகலா தங்கப்போவது எங்கே


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா விரைவில் விடுதலையாக உள்ள நிலையில், அவர் தஞ்சாவூரில் சிறிது காலம் ஓய்வெடுக்க இருக்கிறார்.


சென்னையில் அவருக்காக போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வந்த புதிய பங்களாவும் முடக்கப்பட்டுள்ளதால் தற்போதைய நிலவரப்படி இந்த சாய்ஸ் எனத் தெரிகிறது.


தஞ்சை அருளானந்தம் நகரில் சசிகலாவின் கணவர் மறைந்த நடராஜனுக்கு சொந்தமான வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.


பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தனது சித்தி சசிகலாவை விடுதலை செய்ய வைப்பதற்கான பணிகளை மும்முரமாக கவனித்து வருகிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். ஜனவரியில் சசிகலா விடுதலையாவார் எனக் கூறப்படும் நிலையில் அதற்கு முன்பாகவே அவர் மீட்டெடுப்பதற்கான சட்டப்பணிகளை நுணுக்கமாக வழக்கறிஞர்கள் குழு மேற்கொண்டு வருகிறது.


இதற்கு காரணம் வரும் ஜனவரியில் (தை மாதம்) நடைபெறவுள்ள டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணி திருமணத்திற்கு சசிகலா தலைமை தாங்க வேண்டும் என்பது தான்.


உறவுகளுக்குள் ஏற்பட்டுள்ள ஊடல்கள் சரி செய்யப்பட்டு அந்த திருமண நிகழ்ச்சி மூலம் அனைவரும் ஒன்றுகூடுவார்கள் என்பது அமமுகவினர் நம்பிக்கை. இதனிடையே சசிகலா விடுதலைக்கு பிறகு அவர் எங்கு தங்குவார் என்பது தான் இப்போது எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி.


சென்னையை பொறுத்தவரை சசிகலா தரப்புக்கு தற்போது நிலவரம் சரியில்லாத நிலையிலேயே இருக்கிறது. வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் சொத்துக்களை முடக்கி வருவதால், சிறைவாசத்துக்கு பிறகு தஞ்சை அருளானந்தம் நகரில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா சில வாரங்கள் ஓய்வில் இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


சென்னையில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இல்லத்தில் சசிகலா தங்குவதை டிடிவி தினகரன் விரும்பமாட்டார். அதேபோல் டிடிவி தினகரன் இல்லத்தில் சசிகலா தங்கினாலும் அது சர்ச்சையை உருவாக்கும் என்பதால் தஞ்சாவூர் தான் தற்காலிக சாய்ஸ் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரசுடைமை


சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகிய பிறகு மீண்டும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் தங்கமுடியாத வகையில், அண்மையில் அது அரசுடமை ஆக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துக்களும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டிருக்கிறது.