ரபேலை இயக்கும் முதல் பெண் விமானி


இந்திய விமானப் படையில், சமீபத்தில் சேர்க்கப்பட்ட, இந்தியாவின் அதிநவீன போர்விமானமான, "ரபேல்" போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற சிறப்பை பெறுகிறார், ஷிவாங்கி சிங், (25). இவரது சொந்த ஊர், உத்தர பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி. இவரது தந்தை குமரேஷ்வர், சுற்றுலா நிறுவனம் நடத்தி வருகிறார். தாய் சீமா சிங், இல்லத்தரசி.


சிறு வயதில் ஷிவாங்கியின் தாத்தா, டில்லியில் உள்ள விமானப் படை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார். அதுதான், ஷிவாங்கியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.


வீடு திரும்பியதும், அருங்காட்சியகத்தில் பார்த்த பல்வேறு போர் விமானங்களைப் பற்றி, குடும்பத்தாரிடம் கூறிய ஷிவாங்கி, விமானப் படையில் சேர்வது தான் லட்சியம் என, அப்போதே தெரிவித்து விட்டார்.


அந்த லட்சியம், 2017ல், இந்திய விமானப் படையில் சேர்ந்ததன் மூலம் நிறைவேறியது. இவர், இந்திய விமானப் படை பிரிவில் இணைந்து, வெகு விரைவில், "மிக் - 21 பைசன்" விமானத்தை ஓட்டினார்.


இவருடன் சேர்த்து, இந்தியாவில் மொத்தம், 10 பெண் விமானிகள், விமானப் படையில் உள்ளனர். அவர்களில், முதன் முதலாக, ரபேல் போர் விமானத்தை இயக்கும் வாய்ப்பு, ஷிவாங்கிக்கு கிடைத்துள்ளது.


இதற்காக, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின், ஹரியானாவின் அம்பாலா விமானப் படை பிரிவில் இணைந்து, ரபேல் போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற சிறப்பை, ஷிவாங்கி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.