நாயன்மார்கள் 63 பேர் - சடைய நாயனார்

சடைய நாயனார்


  "அரனடியே அடைந்திட்ட சடையனுக்கு அடியேன்."


"சுந்தரரின் தந்தையார்."


“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”


சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும்.


சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.


நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.


திருநாவலூருலே, "மாதொரு பாகனார்க்கு வழிவழியடிமை செய்யும்" வேதியர் குலமாகிய ஆதிசைவர் குலத்திலே தோன்றிச் சிவன் திருநாமமாகிய சடையன் என்பதே தமக்கும் நாமமாகக் கொண்டிருந்து சிவனடிமை நெறியில் வாழ்ந்து திருவருளுக்குப் பாத்திரமாய் விளங்கியவர் இந்த நாயனார்.


அது, "அரும்பா நின்ற அணிநிலவும் பணியு மணிவா ரருள் பெற்ற சுரும்பார் தொங்கற் சடையனார்" எனுஞ் சேக்கிழார் வாக்கினால் தெளியப்படும்.


அத்தகைய பெருந்தகையாகிய அவர்பெருமை போற்றத் தகுமெனல் சொல்லாமே யமையும். அந்நயம் புலப்படுமாறு அவர்புராணச் செய்யுளிலும் பெருமை போற்றுதல் சொல்லாமலே கொள்ள விடப்பட்டிருத்தல் காணலாம்.


அது "தம்பிரானைத் தோழமைகொண் டருளித் தமது தடம்புயஞ்சேர் கொம்பனார் பால் ஒருதூது செல்ல ஏவிக் கொண்டருளும் எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணையில் துணைவராம் நம்பியாரூ ரரைப் பயந்தார் ஞாலமெல்லாங் குடிவாழ" என வரும்.


சைவவளமும், செல்வமும் கொழிக்கும் திருநாவலூர் நகரில் ஆதிசைவர் மரபில் சடையனார் என்னும் சிவத்தொண்டர் பிறந்தார்.


இவரது மனைவியார் பெயர் இசைஞானியார். தமிழுலகம் செய்த தவப்பயனாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரது மகனாகப் பிறந்தார்.


தமது மகனை நரசிங்கமுனையார் தம்மோடு அழைத்துப் போக எண்ணிய போது இவர் மன்னரது அன்பிற்குக் கட்டுப்பட்டு குழந்தையை மறுமொழி பேசாது அனுப்பி வைத்த பெருமையயைப் பெற்றவர்.


அவர், திருத்தொண்டத் தொகையளித்த திருவாளனும் திருத்தொண்டர் புராண காவியத்தின் தன்னிகரில்லாத் தலைவனுமாகவல்ல நம்பியாரூரைத் தமக்கு மகனாகப் பெற்றதன் மூலம் தமது குலம் நலம் தலம் மூன்றும் ஒப்புயர்வற்ற விளக்கம் பெற வைத்ததுடன் தம்பிரானையே தோழனாகக் கொண்டு தூதனுப்பியதும் உற்ற உருவுடனே தான் கயிலாய மடைந்ததுடன் தன் தோழனாகிய சேரமானையும் அவ்வண்ணமே தன்னுடன் அங்கெய்த வைத்தது மாகிய அம்மகன் செயல்களால், மெய்த்தொண்டராவார்க்குத் திருவருள் வழங்கத்தகும் அளப்பரிய பெருமகிமை இத்தகையதென அறிந்துணர்ந்து ஞாலமெலாம் வாழவந்த பெருவாழ்வுக்கு முன்னிலைக் காரணமாயிருந்து தாமுஞ் சிவப்பே றெய்தியுள்ளார்.


சுந்தரமூர்த்தி சுவாமிகள்,தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தம் பெற்றோர்களைப்பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார்.


திருதொண்டத் தொகை பாடி உலகையெல்லாம் உய்வித்த தெய்வபுதல்வனை ஈன்ற சடைய நாயனாரும், இசைஞானியாரும் இறைவன் திருவடி நீழலை அடைந்து இன்புற்றனர்.


சடைய நாயனார் புராணம்


இறைவன்: பக்தனேஸ்வரர்


இறைவி: மனோன்மணி


அவதாரத் தலம்: திருநாவலூர்


முக்தி தலம்: திருநாவலூர்


சடையனார் நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில்  கொண்டாடப்படுகிறது.


அரனடியே அடைந்திட்ட சடையனுக்கு அடியேன்.


 "ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"


"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும். 


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்