பஞ்ச சபைத் ஸ்தலங்களும்- பஞ்சாட்சர வடிவமும் மதுரை – வெள்ளிசபை-பகுதி 1

பஞ்ச சபைத் ஸ்தலங்களும்- பஞ்சாட்சர வடிவமும் 


மதுரை – வெள்ளிசபை – ய


1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய



நடனக்கலைக்கு நாயகனாக திகழ்பவர் சிவன். அதனால்தான் அப்பெருமானை “ நடேசன் “ என்று போற்றுகின்றோம். இவர் 108 நடனங்களை ஆடியிருக்கிறார்.


இதில் அவர் மட்டும் தனித்து ஆடியவை 48. தேவியோடு சேர்ந்து ஆடியவை 36. திருமாலுடன் ஆடியது 9. முருகப்பெருமானுடன் ஆடியது 3. தேவர்களுக்காக ஆடியது 12 ஆகும்.


சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவார்கள். இதனை “ பார்க்க முக்தி தரும் தில்லை “ என்று கூறுவர். நம் ஆன்மாவை சிவகாமியாக எண்ணி நடராஜப்பெருமானின் நடனத்தை காண வேண்டும் என்பது ஐதீகமாகும்.


சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.


பொன்னம்பலம், வெள்ளியம்பலம், தாமிரசபை, சித்திரசபை,ரத்தினசபை என நடராஜன் பஞ்சபைகளில் திருநடனம் ஆடுகிறார்.


ஆரம்பத்தில் கோயில் மண்ணால் கட்டப்பட்டு, சுந்தரேசுவரருக்கு மட்டுமே கோயில் இருந்தது. ஞானசம்பந்தர் கி.பி. 7-ம் நூற்றாண்டில் மதுரைக்கு வந்தபோது, மீனாட்சி அம்மனுக்கு தனி கோயில் இல்லை.


காலப்போக்கில்தான் கல்லால் ஆன கோயில் உருவாக்கப்பட்டது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் காலத்தில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. குலசேகரபாண்டிய மன்னரால் மீனாட்சிக்கு கோயில் எழுப்பப்பட்டது. 


நான்கு சபைகளிலும் இடதுகாலை தூக்கி நடனம் ஆடும் சிவன், மதுரையில் வெள்ளியம்பலத்தில் மட்டும் சிவன் வலதுகாலை தூக்கி நடனமாடுகிறார்.


இது ஏன் என்று பக்தர்களுக்கு தெரியுமா? 


இந்த நேரத்தில் அதைப் பற்றி அறிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள். நடராஜர் ஐந்து நடன சபைகளில் ஆடும் திருநடனத்தை காண கண் கோடி வேண்டும்.


நடராஜப் பெருமான் இவ்வாறு ஆடிக்கொண்டே இருப்பதால் தான் உலகத்தின் இயக்கம் இயற்கையை ஒட்டி இயல்பாக இருக்கிறது.


சிதம்பரத்தில் பொன்னம்பல சபையில் இவர் ஆனந்தத்தாண்டவம் ஆடி பக்தர்களை மகிழ்விக்கிறார். திருநெல்வேலியில் தாமிரசபையில் ஆடுவது முனி தாண்டவம். குற்றாலத்தில் இருப்பது சித்திரசபையில் நடராஜர் ஆடுவது திரிபுரதாண்டவம். திருவாலங்காட்டில் ரத்தினசபையில் ஆடுவது காளிதாண்டவம்.


மதுரை மீனாட்சியம்மன் கோயில் வெள்ளியம்பலத்தில் அவர் ஆடுவது சந்தியா தாண்டவம்.


ஐந்து நடனசபைகளில் மதுரையில் மட்டும் ஏன் இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி நடனமாடுகிறார் என்பது ஒரு சுவராஸ்யமான கதை உள்ளது. 


மதுரையில் மீனாட்சி, சுந்தரேசுவரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம்.


திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை.


இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள்.


அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர். தாங்கள் சிவதாண்டவம் கண்டபின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும்.


அதைக்கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர்.


கால்மாற்றி ஆடும் நடராஜர் நடராஜர் அனைத்து சிவ ஆலயங்களிலும் இடதுகாலை தூக்கி ஆனந்த நடனம் ஆடுகிறார்.


ஆனால் மதுரையில் மட்டும் அவர் வலதுகாலைத் தூக்கி களிநடனம் புரிகிறார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வெள்ளியம்பலத்தில் பக்தர்கள் இந்த தரிசனத்தைக் காணலாம்.


தனது பக்தருக்காகவே அவர் காலை மாற்றி ஆடினார்.  இறைவன் நடனம் பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவபக்தனான அவன் ஆயகலைகளில், 63ஐ கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது.


ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான்.


முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்கு, காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு ஓர் உண்மை உரைத்தது. பக்தனின் வேண்டுகோள் பரதம் கற்க இன்று ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே!


இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்? என நினைத்தவன் நேராக நடராஜர் சன்னதிக்குச் சென்றான்.


பகவானே! உன் கால் வலிக்குமே! காலை மாற்றி ஆடு!" என வேண்டினான். இறைவன், மன்னனை மேலும் சோதிக்கும் விதமாக சலனமின்றி நின்றிருந்தான்.


அப்படி நீ கால் மாறி ஆடாவிட்டால், என் முன்னால் ஒரு கத்தியை நட்டுவைத்து அதன்மீது விழுந்து உயிர் துறப்பேன்,' என்று மிரட்டலாய் மன்றாடினான் மன்னன். 


மதுரை மீனாட்சி கோவில் நடராஜர் சற்றே கண்மூடி மீண்டும் திறந்தபோது அப்படியே மெய்சிலிர்த்துப் போனான்.



ஆமாம், பக்தனுக்காக இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி ஆடிக்கொண்டிருந்தார் நடராஜப்பெருமான்


எனக்காகக் கால் மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தந்தருள வேண்டும், என்று நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டான் மன்னன்.


பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன், அவனுக்காக இடக்காலை ஊன்றி, வலது காலை தூக்கி ஆடினார்.


சந்தியாதாண்டவம் இன்றைக்கும் சுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார்.


வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.


நடராஜரின் கால் மாறி ஆடிய இந்த சந்தியா தாண்டவம் பற்றி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வல்லாளசேன மன்னரின் நைக்தி செப்பு பட்டயத்தில் குறிப்பு காணப்படுகிறது


நாளை மதுரை – வெள்ளிசபை – ய   பகுதி 2 தொடரும்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


திருச்சிற்றம்பலம்.


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்