உலக பார்வை தினம் 08.10.2020


 

கண் பார்வை என்பது மிக அவசியமான ஒன்று. இந்த கண் பார்வை குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பு, ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைகளில் உலக கண் பார்வை தினத்தை அறிவித்துள்ளது.


மனிதர்கள், மிருகங்கள் என அனைத்திற்கும் மிக அவசியமான ஒன்று, கண் பார்வை. கண் பார்வையின்மை, பார்வைக்குறைபாடு உள்ளிட்டவை பற்றி உலக அளவில் அறிவதற்காகவும், பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தவும்,


ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைகளில் உலக சுகாதார அமைப்பு, உலக கண் பார்வை தினம் என அறிவித்தது.


பார்வைக்கான உரிமை’ உலகளாவிய முன்முயற்சியின் கீழ் உள்ள உலகப் பார்வையிழப்புத் தடுப்பு முகவாண்மையத்தால் (IAPB) உலக பார்வை தினம் ஒருங்கிணைக்கப் படுகிறது.


கண்கள் தான் நம்மை இந்த உலகின் அழகைக் காண வழிவகுக்கிறது. அதுமட்டுமின்றி அழகான கண்கள் தான் முகத்திற்கு அழகும் கூட. ஆனால் இந்தக் கண்களின் ஆரோக்கியமும், அழகும் நாம் செய்யும் சில வேலைகளால் கெட்டு போகின்றன.


இரவு அதிக நேரம் கண்விழித்து இருப்பது, அதிக நேரம் டிவி, லேப்டாப் போன்றவற்றைக் காண்பது போன்றவை கண்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்க கூடியவையாகும். 


அதன்படி இந்தாண்டு அக்டோபர் 8 ஆம் தேதி "உலக பார்வை தினம்" உலகளவில் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று கண்களின் முக்கியத்துவம் குறித்த பல கருத்தரங்குகள்,  பார்வை இழப்பு குறித்த விழிப்புணர்வுகளும் நடத்தப்படும். மேலும், பல இடங்களில் கண்தானம் செய்யகோரிய பதாகைகளும், அதுகுறித்த மக்களிடையே ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.


கண் பார்வை இழப்பைத் தடுப்பதே இந்த உலக கண் பார்வை தினத்தின் நோக்கமாகும். பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர்கள், உணவு குறைப்பாட்டால் காலப்போக்கில் பார்வை இழப்பவர்கள் சமூகத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.


எனவே உலக சுகாதார அமைப்பின் முயற்சியால் உலக கண் பார்வை தினத்தில் நடத்தப்படும் முகாம்கள் மூலம் பார்வை குறைபாடுகள் தீர்க்க வழிவகுக்கப்படுகின்றது.


மேலும், இதன் மூலம் பார்வை குறைப்பாட்டிற்கு முக்கிய காரணிகளான கண் புரை, கண் அழுத்த நோய், கண்ணில் பூ விழுதல் போன்றவற்றிற்கு இலகுவான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. 


இது, தவிர்க்கக் கூடிய பார்வை இழப்பு மற்றும் பார்வைக் கோளாறு ஆகிய உலகளாவிய பிரச்சினைகளின் மேல் கவனத்தைத் திருப்பும் ஓர் உலக விழிப்புணர்வு நாள்.


ஒவ்வொரு ஆண்டும் உலகப் பார்வையிழப்பு தடுப்பு முகவாண்மையம் (IAPB) ஒரு ‘நடவடிக்கைக்கான அறைகூவல்’ மீது கவனம் செலுத்துகிறது.


மேலும், உலகளவில் 285 மில்லியன் பேருக்கு பார்வைக்குறைபாடு உள்ளதாகவும், 246 மில்லியன் பேர் மிககுறைவான பார்வை திறனோடும், 39 மில்லியன் பேர் பார்வையில்லாமலும் வருகின்றனர். அதில் பார்வைக்குறை உள்ளவர்களில் சுமார் 90 சதவீத பேர், குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பத்தில் இருக்கின்றனர்.


பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களைக் கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதொரு உறுப்பாகும். நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்களே. கண்களில் உண்டாகிற பிரச்னைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் உகந்ததல்ல.


சாலேசரம் என்னும் வெள்ளெழுத்து


நாற்பது வயதைத் தாண்டும்போது பார்வையில் ஏற்படும் குறைபாட்டினால் கருப்பாக இருக்கிற எழுத்துகள் பளிச்சென்று தெரியாமல் வெள்ளைப் பேப்பரோடு சேர்ந்து வெள்ளையாகத் தெரியுமாம்.


இதைத்தான் வெள்ளெழுத்து என்கிறோம். `தலைமுடி நரைப்பதைப்போல, வயதான காலத்தில் தோலில் சுருக்கம் விழுவதைப் போல, வெள்ளெழுத்துப் பிரச்னையும் வயதாவதால் வருவது தான். புத்தகம் படிப்பதற்கு கஷ்டம், புத்தகத்திலுள்ள சின்ன எழுத்துக்களைப் படிப்பதற்குக் கஷ்டம், சற்று குறைவான வெளிச்சத்தில் படிப்பதற்கு கஷ்டம், கம்ப்யூட்டரில் எழுத்துக்களைப் பார்ப்பதற்கு கஷ்டம், செல்போனில் நம்பரைப் பார்ப்பதற்கு கஷ்டம், கொஞ்ச நேரம் படித்தாலே நிறைய நேரம் படித்தது போன்ற ஒரு நினைப்பு. கண்களில் ஓர் அசதி, களைப்பு, எரிச்சல். இவைகள் எல்லாமே நாற்பது வயதை நெருங்கியவர்களுக்கும், நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்கும் ஏற்படக்கூடிய வெள்ளெழுத்துப் பிரச்னையாகும்.


சர்க்கரை நோயால் பார்வையிழப்பு


சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் கண்களை அவ்வப்போது கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதனை செய்துகொள்ளுவதை வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். இரத்தத்தில் இருக்கும் அதிக அளவு சர்க்கரை கண்களைப் பாதிக்கும். 20 வயதிலிருந்து 74 வயது வரை உள்ளவர்களுக்குப் பார்வை இழப்பிற்கு சர்க்கரை நோய் முதல் மற்றும் முக்கியக் காரணமாக உள்ளது. சிறிய அளவில் ஆரம்பிக்கும் கண் குறைபாடுகள் சர்க்கரை நோயினால் அதிகரிக்கக்கூடும். அதனால் பார்வையில் சற்று மாறுபாடு ஏற்பட்டாலும் கண் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.


பார்வை இழப்பு  வல்லுநர் குழுவின் கண்டுபிடிப்பு அறிக்கை 2017:


    25.3 கோடி மக்களுக்குப் பார்வைக் கோளாறு (2015-ல்)
    3.6 கோடி மக்கள் பார்வை இழந்தவர்கள்
    2.17 கோடி மக்களுக்குக் கடும் மற்றும் மிதமான பார்வைக் கோளாறு (தொலைவு)
    பார்வைக் கோளாறு உள்ளவர்களில் 55% பேர் பெண்கள்


பார்வை இழப்பு மற்றும் பார்வைக் கோளாறைக் கட்டுப்படுத்தும் தேசியத் திட்டம்*: இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் 100% நிதி உதவித் திட்டம் இது.


விரிவான கண் பராமரிப்பு சேவையை வழங்கி இந்தியாவில் கண் பராமரிப்பு பற்றிய சமுதாய விழிப்புணர்வை அதிகரித்து பார்வையிழப்பையும் பார்வைக் கோளாறையும் தடுக்க 1976 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டுக்குள் பார்வையிழ்ப்பு கொண்டவர்களின் எண்ணிக்கையை 0.2% ஆகக் குறைக்கும் இலக்கிற்கு நேராக பல்வேறு நடவடிக்கைகள்/ முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


தேசிய அளவில்  குழந்தைப்பருவப் பார்வையிழப்பு/குறைந்த பார்வை ஆயிரத்துக்கு 0.80 ஆக உள்ளது.


கண்புரை, விலகல் பிழை, வெண்படலக் குருடு, கண்ணழுத்தம் ஆகியவையே பார்வையிழப்புக்கான முக்கிய காரணங்கள்.கண் நலக் குறிப்புகள்:


ஆரோக்கிய உணவு: உணவில் கூடுதல் பச்சைக் காய்கறிகள், மஞ்சள் மற்றும் சிவப்பு பழங்கள்.


 புகைக்காதீர்: கண்புரை, கண்நரம்புச் சிதைவு, விழித்திரைப்புள்ளி சிதைவு ஆகியவற்றிற்குப் புகைத்தல் ஓர் ஆபத்துக் காரணி.


 குளிர் கண்ணாடி: சூரிய கதிர்களின் புற ஊதாக் கதிரில் இருந்து காக்க.


 பாதுகப்புக் கண்ணாடிகள்: ஆபத்தான வேலைகளில் ஈடுபடும்போது.


 கணினித் திரை: 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்ணுக்கு ஓய்வு: 20   வினாடிகள் 20 அடிகள் தொலைவுக்குப் பார்க்கவும்.


சுத்தம் பேணல்: கண்களைத் தேய்க்கும் அல்லது தொடும் முன் கைகளைக் கழுவவும்.


தொடர் கண் சோதனை  கடையில் நேரில் மருந்து வாங்குதல்: கண் தொற்றுக்கு நேரடியாக கடையில் மருந்து வாங்குவதைத் தவிர்க்கவும்.


 தொடர் உடல்பயிற்சி: உடல் பயிற்சி உடலுக்கு மட்டுமல்லாமல் கண்ணுக்கும் நலம் பயக்கம்.


குடும்பத்தினருக்கு, குறிப்பாக பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு, கண் சோதனை அவசியம்: இளம் வயதினர், பள்ளி செல்வோர், வயதானோர், நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோயாளிகள்.”


தற்பொழுது கொரோனா பரவிவரும் சூழலில், உலக கண் பார்வை தினத்தையொட்டி பல்வேறு போட்டிகள் ஆன்லைனில் நடத்தப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, மக்கள் இதுகுறித்து தங்களின் கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து பரப்பிக்கொண்டே வருகின்றனர்.


கண் நலம் பேணுவதில் அக்கறை கொள்வோம்நன்றி தொகுப்புமோகனா செல்வராஜ்