முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த மாதம் 10-ம் தேதி மூளை அறுவை சிகிக்சை காரணமாக டெல்லி ஆர்.ஆர். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, கோமாவில் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே, அவருக்கு, கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரணாப் முகர்ஜி 31.08.2020 மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
01.09.2020 காலை 9 மணி அளவில் பிரணாப் முகர்ஜியின் உடல் ராணுவ மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள பிரணாப் முகர்ஜி இல்லத்தில் அவரின் உடலுக்கு முக்கிய தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, டெல்லியில் உள்ள லோதி சாலை மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் தகனம் செய்யப்பட்டது.