கலைவாணர் அரங்கில் பேரவை கூட்டம்: எம்எல்ஏக்களுக்கு கொரோனா டெஸ்ட்


தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற திங்கட்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நேரடியாக வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


அதேபோன்று, கூட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்கள், பத்திரிகையாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டன. தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 14ம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு சென்னை, வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது.


இந்த கூட்டத்தொடர் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று கடந்த 8ம் தேதி நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


அரசு சார்பில் கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். கூட்டம் நடைபெறும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.


அதன்படி, இன்று முதல் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அனைத்து எம்எல்ஏக்களுக்கு சுகாதார துறை அதிகாரிகள் மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க முடியும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார்.