ருணம், ரணம் போக்கும் செவ்வாய்கிழமை பிரதோஷம்

ருணம், ரணம் போக்கும் செவ்வாய்கிழமை பிரதோஷம் - சிவ தரிசனம் கோடி புண்ணியம்பொதுவாக பிரதோஷ காலம் சிவ வழிபாட்டுக்கு உரியது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் வரும் திரயோதசி திதி வரும் மாலையே பிரதோஷ தினமாகக் கருதப்படுகிறது.


வளர்பிறை பிரதோஷத்தின்போது தேவர்களும் தேய்பிறை பிரதோஷத்தின்போது மனிதர்களும் கட்டாயம் சிவனை வழிபட வேண்டும் என்பது ஐதிகம். 


பிரதோஷ வேளையில் தேவர்களும் மூவர்களும் சிவ சந்நிதியில் இருப்பார்கள். பிரதோஷ காலத்தில்தான் இறைவன் ஆனந்தக் கூத்தாடி தேவர்களைக் காத்தார். துன்பங்கள் சூழும் வேளையில் இறைவனின் திருவடியே காப்பு என்பதே இதன் தாத்பர்யம். எனவே, இந்த நாளில் பிரதோஷ வேளையில் சிவதரிசனம் செய்ய வேண்டியது அவசியம்.
எப்போதும் சிவ தியானத்திலேயே நிலைத்திருப்பவர் நந்திதேவர். ஆனால், பிரதோஷ வேளையில் மட்டும் தியானம் கலைந்து சிவ பக்தர்களை வரவேற்கக் காத்திருப்பார் என்று சொல்கின்றன.


சாஸ்திரங்கள். அதனால்தான் பிரதோஷ வேளையில் சிவனோடு சேர்ந்து நந்திக்கும் விசேஷ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மேலும், நந்திபகவானிடம் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றும்படி அவர் சிவபெருமானிடம் வேண்டுதல் செய்வார்.

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யவேண்டும்.

 

பிரதோஷ தரிசனம் பெரும்புண்ணியம். பிரதோஷம் சிவ பூஜைக்கு உகந்தது. வளர்பிறை, தேய்பிறைகளில் வரும் திரயோதசியில் சந்தியா வேளையில் அனுசரிக்கப்படும் பிரதோஷ நாளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவது வளம் சேர்க்கும்

 

பிரதோஷ தினத்தில் விரதமிருந்து மாலை சிவதரிசனம் செய்ய வேண்டும். சிவனுக்கு சங்குப்பூ, வில்வ இலை கொண்டு பூஜை செய்வது விசேஷம். 

 

அதிலும் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷம் "ருண விமோசன பிரதோஷம்" என்று அழைக்கப்படுகிறது. .

ருணம் என்றால் கடன் ஆகும். வாழ்வில் கடன் சுமையில் மீளமுடியா நிலையில் உழன்று கொண்டிருப்பவர்கள், வருமானத்திற்கு மீறிய கடன் சுமை உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷத்தில் தொடர்ந்து கலந்து கொண்டபடியே முயற்சியை மேற்கொண்டால் இறைவனும் நம்முடன் கலந்துகொண்டு கடன் தீரும் வகையில் நம்மை வழி நடத்துவார்.

 

மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு! இதனால், செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும். பித்ரு தோஷம் விலகும். முன்னோர் ஆசி கிடைக்கும். கடன் தொல்லை தீரும்.

 


எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும் ரணமும் நீங்கும் என்பது சத்தியம்.

 

சித்தர்களின் ஜீவ சமாதி, 100ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிவாலயங்கள்,ஸ்ரீ சரபேஸ்வரர் சன்னிதி போன்ற இடங்களில் வழிபாடு செய்யலாம்.

 

ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மர் வழிபாடும் இந்த பிரதோஷ காலத்தில் சிறப்பானது. அருணாசல கிரிவலம் மிக மிக சிறப்பு.

 

பிரதோஷ வேளையில் சிவலிங்கத் திருமேனிக்கு பால், இளநீர், தேன், தயிர், விபூதி, சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, செவ்வந்தி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தூப, தீப வழிபாடுகள் நடைபெறும்.

 

அதற்கு முன்பு நந்தியெம்பெருமானுக்கும் அபிஷேகம் நடைபெறும். அருகம்புல், மலர்கள் சாத்திய பிறகு வில்வத்தால் நந்திதேவருக்கு அர்ச்சனை செய்வார்கள். நந்தி பகவானுக்கு தீபம் காட்டி, அதன் பின்னர், மூலவருக்கு நடைபெறும் தீபாராதனையை நந்தியெம்பெருமானின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு தரிசிப்பது விசேஷம்.

 

மற்ற இடங்களிலும் கிரி வலம் செய்யலாம். அன்றைய தினம் மௌன விரதம் இருப்பது கூடுதல் பலன் தரும். கேரட் சாதம், தக்காளி சாதம், துவரை சாதம் அன்னதானம் செய்யலாம். அன்று ரத்ததானம் செய்யலாம்.

 

முருகப் பெருமான் குடி கொண்டுள்ள ஸ்தலங்களில் கிரி வலம் செய்யலாம். பழனி,திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் , கழுகு மலை சிறப்பு ஸ்தலங்கள்.திருச்செந்தூர் செல்வோர் ஸ்ரீ சத்ரு ஸம்ஹார மூர்த்தி ஸ்வாமி ஜீவ சமாதியிலும், கழுகு மலை செல்வோர் மிளகாய்ப்பழ சித்தர் ஜீவ சமாதியிலும்,பழனியில் ஸ்ரீ போகர் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர பட்டர் ஜீவ சமாதியிலும், திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ மாயாண்டி சித்தர் ஜீவ சமாதியிலும் இந்த நாளில் தியானம் செய்யலாம்.

 

இவ்வாறு தரிசனம் செய்ய, பாவங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதிகம். தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும். 


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்