பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ்: மகத்தான பாடல்களைப் பாடிய கலைஞன்


தமிழ் சினிமாவின் மகத்தான பாடகர்களில் ஒருவர் பி.பி. ஸ்ரீனிவாஸ். காலத்தால் அழியாத பாடல்கள் என்று சொல்லப்படும் பல பாடல்களை அவர் பாடிவிட்டுச் சென்றிருக்கிறார். அதனால் தான் இன்றைக்கும் அவரையும் அவர் பாடிய பாடல்களையும் நினைவில் கொள்கிறோம். 


செப்டம்பர் 22, 1930-ல் பிறந்து, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைப் பூர்விகமாகக் கொண்டவர் பிரதிவாதி பயங்கர ஸ்ரீநிவாஸ் என்கிற பிபிஎஸ் (Play Back Singer என்பதை பிபிஎஸ் என்றும் கூறலாம் என்றும் வேடிக்கையாகக் குறிப்பிடுவார்). இளம் வயதில் இருந்தே இசையில் ஈடுபாடு மிகுந்தவராக இருந்தார்.


ஹிந்திப் பாடல்களையும் அதன் பாடகர்கள் மீதும் அளவில்லாத விருப்பம் கொண்டிருந்தார். சிறந்த குரல் வளம் கொண்ட அவரை, குடும்ப நண்பரான ஈமனி சங்கர சாஸ்திரி என்ற வீணைக் கலைஞர் சென்னைக்கு அழைத்து வந்தார்.


1952ஆம் ஆண்டு ஜெமினி தயாரிப்பில் வெளிவந்த மிஸ்டர் சம்பத் என்கிற ஹிந்திப் படத்தில் இரண்டு, மூன்று வரிகள் கொண்ட பாடல்களை முதன்முதலாகப் பாடினார். இப்படத்துக்கு இசையமைத்தவர், ஈமனி சங்கர சாஸ்திரிதான்.


தமிழில் ஜெமினி கணேசனுக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சில பாடல்களைப் பாட வாய்ப்பளித்தார் ஜி. ராமநாதன். அடுத்த வீட்டுப் பெண் (1960) படத்தில் பிபிஎஸ் பாடிய கண்ணாலே பேசி பேசி கொல்லாதே, வனிதா மணியே, மாலையில் மலர் சோலையில் போன்ற மூன்று பாடல்கள் ஹிட் ஆகி, அவரைப் பிரபலப்படுத்தின. 


பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரான ஜாதகம் என்ற படத்தில் பாடிய சிந்தனை ஏன் செல்வமே....' என்ற பாடல் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்று தந்தது. விடுதலை படத்தில் இடம் பெற்ற உன்னாலே நான் என்னாலே..., பிரேம பாசம் படத்துக்காக அவனல்லால் புவியின் மீது... ஆகிய பாடல்கள் பி.பி.ஸ்ரீநிவாஸுக்குத் தனித்துவமான இடத்தை உருவாக்கித் தந்தன.


காலங்களில் அவள் வசந்தம்..., பால்வண்ணம் பருவம் கண்டு..., என்னருகே நீ இருந்தால்..., பொன் ஒன்று கண்டேன்..., மயக்கமா கலக்கமா..., நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்... ஆகிய பாடல்கள் பி.பி.ஸ்ரீநிவாஸுக்குப் பெரும் புகழைத் தேடி தந்தன.


அதுவரை ஜெமினி கணேசனுக்கு ஏ.எம். ராஜா தான் அதிகமாகப் பாடி வந்தார். அவருடைய இடத்தை மாற்ற பி.பி. ஸ்ரீநிவாஸுக்கு சில காலம் பிடித்தது. ஜெமினி கணேசனுக்காகப் பாடிய பாடல்கள் ஹிட் ஆனதால் அடுத்ததாக எம்.ஜி.ஆர்., சிவாஜிக்காகவும் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன. 


இளையராஜா காலக்கட்டத்துக்கு முன்பு எம்.எஸ்.வி. இசையமைத்த காலக்கட்டத்தில் டிஎம்எஸ், ஏ.எம். ராஜா, பிபிஎஸ் ஆகியோர் பிரபலமான பாடகர்களாக விளங்கினார்கள்.


இவர்களுடன் சேர்த்து பி. சுசீலா, ஜிக்கி ஆகியோரும் மகத்தான பாடல்களுக்குப் பங்காற்றினார்கள்.


தொழில்நுட்பத்தின் பிடிக்குள் தமிழ்த் திரையிசை உலகம் செல்வதற்கு முன்பு, அதன் உதவி பெரிதும் இல்லாமல் மாபெரும் திறமையின் வழியாக சகாப்தம் படைத்தார்கள். பிபிஎஸ்ஸின் குரல் மெலடி பாடல்களுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது.


காதல் உணர்வுகளையும் ஏக்கத்தையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்த இசையமைப்பாளர்களும் இயக்குநர்களும் இவருடைய குரல் முதல் தேர்வாக இருந்திருக்கிறது.


பொதுவாக மென் உணர்வுகள் கொண்ட பாடல்களுக்கு ஆயுள்காலம் அதிகம். அதிலும் பிபிஎஸ் பாடிய பாடல்களுக்குக் கூடுதலாக நூறு ஆண்டுகள் என்று சொன்னாலும் மிகையில்லை. 


ஹிந்திப் பாடல்களுக்கு எப்படி ரஃபியோ அதுபோல தமிழ்ப் பாடல்களுக்கு பிபிஎஸ் என அவருடைய ரசிகர்கள் எப்போதும் மெச்சும் வண்ணம் பாடல்களை அளித்துள்ளார்.


இன்னும் சொல்லப்போனால் அவருடைய குரலில் ஒரு ஸ்டைல், நவநாகரிகத்தன்மை இருக்கும். பாடிய முறையில் தனித்துவம் வெளிப்படும். மனிதன் என்பவன் தெய்வமாகலாம், நிலவே என்னிடம் நெருங்காதே, மயக்கமா கலக்கமா, காலங்களில் அவள் வசந்தம், ரோஜா மலரே ராஜகுமாரி, பாடாத பாட்டெல்லாம், வளர்ந்த கலை என பிபிஎஸ் பாடிய பாடல்களை இன்றைய தலைமுறையினர் கேட்டால் நிச்சயம் அதைப் புதிய பாடல்களைப் போல தொடர்ந்து கேட்பார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். அதுதான் பிபிஎஸ் குரல் செய்யும் மாயம். 


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளி, மராத்தி, கொங்கணி உள்ளிட்ட 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் பிபிஎஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், காந்தாராவ், ராஜ்குமார் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுக்குப் பின்னணிக் குரல் பாடியுள்ளார்.


சிறந்த பாடகராக விளங்கிய பி.பி.எஸ். கவிதைகள் எழுதுவதிலும் தேர்ந்தவராக இருந்தார்.


தமிழில் ஜெமினி கணேசனின் குரலாக இருந்த பிபிஎஸ், கன்னடத் திரையுலகில் ராஜ்குமாருக்காக 300 பாடல்களுக்கும் அதிகமாகப் பாடியுள்ளார். திரையுலகில் என்னுடைய அடையாளமாக பிபிஎஸ்-சின் குரல் இருந்துள்ளது என்று ராஜ்குமார் கூறியுள்ளார்.


1995-ல் ராஜ்குமாருக்கு பால்கே விருது கிடைத்தபோது தன்னுடைய குரலுக்கு அங்கீகாரம் கிடைத்ததாக மகிழ்ந்தார் பிபிஎஸ்.  


பிபிஎஸ் என்றால் சென்னையில் சில வருடங்களுக்கு மூடப்பட்ட உட்லண்ட்ஸ் டிரைவ் இன்-னைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அந்த உணவகத்தின் நெய் தோசையின் ரசிகர்.


பெரும்பாலும் தினமும் மாலை வேளையில் பிபிஎஸ்ஸை அங்குக் காண முடியும். என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் இருந்து லேட்டஸ்ட் இனிப்புகளுடன்தான் வருவார் என்று ஒரு பேட்டியில் பாடகி பி. சுசீலா கூறியுள்ளார்.


46 வருடங்களுக்கும் மேலாக தினமும் சென்ற வந்த இடம் அது என்று 2008-ல் டிரைவ் இன் மூடப்பட்டபோது வருந்தியுள்ளார் பிபிஎஸ். 


பேனா பிரியரான பிபிஎஸ்ஸின் சட்டையில் எப்போதும் பல வண்ணங்களில் பேனாக்களைக் காண முடியும். நல்ல விஷயங்களை எழுத பச்சை பேனா, மங்கல விஷயங்களை எழுத மஞ்சள் பேனா என ஒவ்வொன்றுக்கும்த் தேவையான பேனாவை வைத்திருப்பார். 


கவிதைகள் எழுதுவதிலும் நிறைய ஆர்வம் கொண்டவர். எந்த விழாவுக்குச் சென்றாலும் மேடையேறி அந்த விழாவைப் பற்றி சொந்தமாகக் கவிதை எழுதிப் படிப்பார். பிரணவம் என்கிற கவிதை நூலை தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் வெளியிட்டுள்ளார். 


வாலிக்கு வாழ்வு தந்த பி.பி.எஸ்.


நான் சிரமப்பட்ட நாட்களில் எனக்கு உதவியவர் சிறந்த பின்னணிப் பாடகரும், பன்மொழி வித்தகருமான பி.பி.ஸ்ரீனிவாஸ் என்று நானும்...இந்த நூற்றாண்டும்...என்னும் புத்தகத்தில் கவிஞர் வாலி குறிப்பிட்டுள்ளார்.


சிரம நாள்களில் எனக்கு உதவியவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். கஷ்டப்பட்ட காலத்தில் அவர் காசு கொடுத்து என் இரைப்பையை நிரப்பியிருக்கிறார். நான் வறுமைக்கடலில் மூழ்கியபோதெல்லாம், என் முடியைப் பிடித்துத் தூக்கிக் கரையில் போட்டுக் காப்பாற்றியவர்.


இனியும் காலம் தள்ள முடியாது என்று நினைத்த போது மதராஸýக்கு ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு, மதுரைக்குப் போய்விடலாம் என்று முடிவு கட்டினேன்.


தந்தை மறைந்துபோனார்; தாயோ பம்பாயில் நோய்ப்படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுது கொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமேயில்லை.


இந்த லட்சணத்தில், சினிமாவை விடாமல் பிடித்துக் கொண்டு தொங்குவது, புத்திசாலித்தனமல்ல என்று புரிந்துகொண்டேன்.


ஒரு பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பாடகர் எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஒரு போட்டியாளர்  நிலவே என்னிடம் நெருங்காதே பாடலைப் பாடினார். அவருடைய பாட்டுக்குப் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.


பாடி முடித்தவுடன் எஸ்.பி.பி., கோடையில் ஒருநாள் மழை வரலாம்... என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ என்கிற வரியை மட்டும் பாடச் சொன்னார். ஆனால் எஸ்.பி.பி. எதிர்பார்த்த நுணுக்கத்தைப் போட்டியாளரால் கொண்டு வர முடியவில்லை.


முக்கியமாக என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ என்கிற வரியை மிகவும் ஏக்கத்துடன் பாடியிருப்பார் பிபிஎஸ். கவனியுங்கள்... கோலத்தில் என்கிற வரியை எத்தனை அநாயசமாகப் பாடியிருக்கிறார்.


அவர்தான் பிபிஎஸ் என்று சொல்ல, பார்வையாளர்களுக்குச் சிலிர்த்துவிட்டது. இந்தப் பாடலை எஸ்.பி.பி.யும் பாடி அதன் காணொளி யூடியூப் தளத்தில் உள்ளது.


நீங்கள் பாடும் பாடல் கேட்பவர்களின் காதுகளை மட்டுமல்லாமல் உள்ளத்தையும் தொட வேண்டும் என்பதுதான் பிபிஎஸ்ஸின் இசைத் தத்துவம். அவரால் இதை முழுமூச்சுடன் பின்பற்ற முடிந்திருக்கிறது.


அதனால் தான் இன்றைக்கும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இவர் பாடிய பாடல்களை இன்றைக்கும் மறக்காமல் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். 


2010-ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பாடிய பெண்மானே.... பாடலும் தமிழ் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்ற பி.பி.எஸ். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 82 வயதில், 2013-ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று மறைந்தார். 


 


தொகுப்பு மோகனா  செல்வராஜ்