மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு பெறுவற்கான சட்ட மசோதா

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு பெறுவற்கான சட்ட மசோதா ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் முதல் 12ம் வகுப்பு வரை பயின்று, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற  மாணவர்கள் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி ஆகிய படிப்புகளில் இளங்கலை மாணவர் சேர்க்கையில் 7.5% உள் இடஒதுக்கீடுக்கான சட்ட முன்வடிவை முதலமைச்சர்  பழனிசாமி பேரவையில் தாக்கல் செய்தார். 


சாதி, சொத்து, பெற்றோரின் தொழில், கல்வி, சமூக பொருளாதார காரணிகளை அடிப்படையாக கொண்டு உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 10% இடஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்தது. 


சட்டப்பேரவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி, அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் மருத்துவ மாணவர் சேர்க்கையில் குறைந்து வருவதாக மசோதாவில் இருப்பதை சுட்டிகாட்டி பேசினார்.


மேலும் 7.5% உள் இடஒதுக்கீடு போதாது என்றும் வருகாலங்களில் 10% உயர்ந்த அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வியெழுப்பினார். அதோடு, இந்த உள் இடஒதுக்கீட்டிற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் சட்டபாதுகாப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.


இதற்கு பதில் அளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது எனவும், இதனை அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கிலும், மருத்துவ மேற்படிப்பிற்கான வழக்கிலும் நீதிமன்றம் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். எனவே இந்த உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில், இந்திய மருத்துவ குழுமம் தலையிடமுடியாது என்றும்,  7.5% இடஒதுக்கீட்டிலும் சமூக நீதி காக்கும் வகையில் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். 


இதை தொடர்ந்து பேசிய முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சமூகப் பின்னணியில் வேறுபாடு உள்ளவர்களாக இருப்பதால், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.


இதன்மூலம் 300 க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.