உலக இதய தினம் 29/09/2020


இன்று உலக இதய தினம்-கரோனா காலம்: இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா- இதோ வழிகள்


மனித உடலில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பு இதயம். அத்தகைய இதயம் நோய்வாய்ப்பட்டால், எளிதில் மீண்டு வர இயலாது


எனவே இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வு பெறும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.


உலகை ஆட்டிப்படைத்துவரும் கரோனா வைரஸ், நுரையீரலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்யும். அதேநேரம் இதயம், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளையும் பாதிக்கச் சாத்தியம் உண்டு.


க்கட்டான இந்த நேரத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். புற்றுநோய், காசநோய், எச்.ஐ.வி. போன்ற நோய்களைவிட இதய நோய் பாதிப்பால் ஏற்படும் மரணங்கள் உலகில் அதிகம். 


புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், ஆரோக்கிய மற்ற உணவு, உடல் உழைப்பின்மை போன்றவற்றைத் தவிர்த்தாலே இதயக் கோளாறுகளால் ஏற்படும் 80 சதவீத மரணங்களைத் தவிர்க்க முடியும் என்கிறது உலக இதயக் கூட்டமைப்பு.


கரோனா வைரஸால் இதய நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் மூன்று வகைகளில் பாதிக்கப்படலாம். முதலாவதாக, ரத்தக் கட்டி (Hypercoagulable state) ஏற்படச் சாத்தியம் அதிகம்.


இந்த ரத்தக்கட்டிகள் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டால் மாரடைப்பும், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பக்க வாதமும் ஏற்படலாம்.


அதேபோல், நுரையீரலில் ஏற்பட்டால் Pulmonary embolism ஏற்படும். அதாவது காலில் ரத்தக்கட்டிகள் ஏற்பட்டு, அந்தக் கட்டிகள் உடைந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். இதனால், மூச்சுத்திணறல் ஏற்படும்.


ஒழுங்கற்ற வாழ்வியல் முறைகளால், பல்வேறு இதய நோய்கள் ஏற்படுகின்றன. உரிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அத்தகைய இதய நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.



இதய நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள worldheartday.org என்ற இணையதளத்தில் 4 வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.


1 - இதயம் அறிவோம்:
நமது இதயத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், வரவிருக்கும் நோய்களில் இருந்து இதயத்தை பாதுகாக்க முடியும். சரியான கால அளவில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
2 - போதிய உணவு:
ஒமேகா-3 சத்துள்ள மீன், நட்ஸ், பெர்ரி பழங்கள், ஓட்ஸ், லெக்யூம்ஸ் போன்ற உணவுப் பொருட்கள் இதயத்தின் நலத்திற்கு ஏற்றது.
3 - செயல்பாட்டு இதயம்:
உடல் உழைப்பு மிகவும் முக்கியம். உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவை மூலம் உடலைப் பேணலாம்.
4 - இதயம் காப்போம்:
ஃபாஸ்ட் புட், ஒழுங்கற்ற உணவு நேரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை, மதுப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.


இதய நோய் ஏற்படாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், நல்ல எண்ணம், நல்ல சுற்றுச்சூழல் ஆகிய ஐந்தும் முக்கியம்.


நம் உடல் உறுப்புகளில் முக்கியமானது இதயம். மூளைச்சாவு அடைந்தவர்களுக்குக் கூட இதயம் வேலை செய்து கொண்டிருக்கும்.


எனவே, இந்த இதயத்தைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம் கடமை.



தொகுப்பு மோகனா செல்வராஜ்