நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு பெயர்ச்சி அடைகின்றன.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி :
ராகுபகவான் சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ஆம் தேதியான 01.09.2020 செவ்வாய்க்கிழமை மிருகசீரிஷம் மூன்றாம் பாதமான மிதுன ராசியில் இருந்து மிருகசீரிஷம் இரண்டாம் பாதமான ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
கேதுபகவான் சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ஆம் தேதியான 01.09.2020 செவ்வாய்க்கிழமை மூலம் முதல் பாதமான தனுசு ராசியில் இருந்து கேட்டை நான்காம் பாதமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
ராகுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதியின் நிலையை கொண்டே ராகு அதன் பலனை தருவார்.
கேதுவுக்கு ராகுவை போலவே சொந்த வீடு கிடையாது. ஞான காரகன் மோட்சகாரகன் என வர்ணிக்கப் படும் கேது பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் அதாவது கேது நின்ற வீட்டதிபதி பகை நீசம் பெறாமல் சுபகிரக சேர்க்கை பார்வையுடன் இருந்தால் ஆன்மிக தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி :
ராகுபகவான் சார்வரி வருடம் புரட்டாசி மாதம் 7ஆம் தேதியான 23.09.2020 புதன்கிழமை அன்று மிருகசீரிஷம் மூன்றாம் பாதமான மிதுன ராசியில் இருந்து மிருகசீரிஷம் இரண்டாம் பாதமான ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
கேதுபகவான் சார்வரி வருடம் புரட்டாசி மாதம் 7ஆம் தேதியான 23.09.2020 புதன்கிழமை அன்று மூலம் முதல் பாதமான தனுசு ராசியில் இருந்து கேட்டை நான்காம் பாதமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள்.
ராகு காயத்ரி மந்திரம்
ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம அஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரசோதயாத்
மந்திரத்தின் பொருள்:
நாகத்தை கொடியில் கொண்டவரும், தாமரையை கையில் ஏந்தியவருமான ராகு பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நீங்கள் நல்லாசி புரிந்து அருள வேண்டுகிறேன்.
பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜபித்தால் ராகு தோஷம், நாகா தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும். அதோடு ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும். விரதம் இருக்க இயலாதவர்கள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் புற்றுள்ள அம்மன் கோயிலிற்கு சென்று வழிபாடு செய்து இந்த மந்திரத்தை ஜபித்து வரலாம்.
ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் சரபேஸ்வரர், பைரவர் வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.
மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, தேங்காய், உளுந்து போன்றவற்றை தானம் செய்வது பாம்பு புற்று பாலூற்றுவது, ராகுவுக்கு பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.
வெள்ளிக் கிழமைகள் மற்றும் ராகு திசை, ராகு புக்தி நடைபெறும் காலங்களில், ராகு காலத்தில் விரதம் அனுஷ்டித்து, உளுந்து கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியம் செய்து ராகு காயத்ரி மந்திரங்களை 108 முறை ஜெபித்து வழிபடுவது, ராகு கிரக தோஷ பாதிப்புகளை குறைக்க செய்யும் சிறந்த பரிகாரம் ஆகும்.
கேது காயத்ரி மந்திரம்:
ஓம் அஸ்வத்வஜயா வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தன்னக் கேதுஹ் ப்ரசோதயாத்
பொருள்:
குதிரைக் கொடியை வைத்திருக்கும் கேதுவை அறிந்து கொள்வோம். சூலம் ஏந்திய கரத்தை கொண்ட அவன் மீது தியானம் செய்வோம். கேது பகவானாகிய அவன், நம்மை காத்து அருள்புரிவான் என்பது இந்த கேது காயத்திரி மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.
இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் துதித்து வருபவர்களுக்கு, வேத, வேதாந்த அறிவு உண்டாகும். பிரச்சினைகள் விலகும். விஞ்ஞான, மெய்ஞான அறிவைப் பெறலாம். வியாதிகள் நீங்கும்.
பகைவர்களை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கும். நல்ல நண்பர்கள் கிடைக்கப்பெறுவார்கள். தினமும் துதிக்க முடியதாவர்கள் சனிக்கிழமைகளில் இம்மந்திரத்தை துதிப்பதாலும் முழுமையான பலன்கள் கிடைக்கப்பெறுவர்கள்.
திங்கட்கிழமைகள் மற்றும் கேது திசை கேது புக்தி நடைபெறும் காலங்களில், கேது பகவானுக்கு விரதமிருந்து பல வகையான வாசமிக்க மலர்களைக் கொண்டு, கேதுவுக்கு அர்ச்சனை செய்து, ஏதாவது ஒரு வகை சித்ரா அன்னம் நைவேத்தியம் வைத்து, கேது பகவான் காயத்ரி மந்திரங்களை 108 முறை துதித்து வந்தால் கேது கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள், பாதிப்புகள் நீங்கும்.
தினமும் விநாயகரை வழிபடுதல், கேதுவுக்குரிய மந்திரங்களை ஜபித்தல், சதூர்த்தி விரதம் இருத்தல், போன்றவை கேதுவால் உண்டாக கூடிய தீய பலன்களை குறைக்க உதவும்.
மந்திரத்தை துதிப்பதாலும் முழுமையான பலன்கள் கிடைக்கப்பெறுவர்கள்.
ராகு – கேது ஆகிய இரு கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வருடத்திற்கு ஒருமுறை ஸ்ரீ காளஹஸ்தி கோயிலுக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில், ராகு – கேது தோஷ நிவர்த்தி பூஜை செய்து வழிபடுவது மிகவும் சிறந்த நன்மைகளை உங்களுக்கு ஏற்படுத்தும்.
அனைத்து ராசியினரும் ஆலயம் சென்று இறைவனை வழி பட்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம் - சிவமே அன்பு
திருச்சிற்றம்பலம்
நன்றி.
பக்தியுடன் மோகனா செல்வராஜ்