சப்த விடங்க தலங்கள் நாகைக்காரோணம் சுந்தரவிடங்கர் கோயில் பகுதி 2

நாகைக்காரோணம்  சுந்தரவிடங்கர்   கோயில் பகுதி 2


சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.


சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கிய நகரம். நாகப்பட்டினம் நாகூர் இரண்டும் ஒன்றையன்று அடுத்து உள்ளன. நாகர்கள் என்ற வகுப்பினர்கள் குடியேறி வாழ்ந்ததால் இப்பகுதி நாகப்பட்டினம் என்று பெயர் பெற்றது.


(கடற்கரையை அடுத்துள்ள ஊர் - பட்டினம்) துறைமுகப்பட்டினம். உரோமானிய, சீனவாணிகம் பண்டைநாளில் இத்துறைமுகம் வாயிலாக நடந்து வந்தது.


பிறநாட்டு வணிகர்கள் இத்தலத்தில் வந்து நிறைந்திருந்தனர் என்று தெரிகின்றது. நாகப்பட்டினம் என்பது மருவி 'நாகை' என்று வழங்கலாயிற்று. புண்டரீக முனிவரை இறைவன் தன் மேனியில் ஆரோகணம் செய்து கொண்ட பெருமை பெற்ற பதி.



சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. அகத்தியருக்குத் திருமணக் காட்சியருளியதும், அதிபத்தநாயனார் அவதரித்ததுமாகிய சிறப்பு கொண்ட தலம்.


ஆதிபுராணம், சிவராஜதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம் என்பன இதற்குரிய வேறு பெயர்கள். ஆதிசேஷன் பூஜித்ததாக வரலாறு. ஊர் - நாகப்பட்டினம். கோயில் - காரோணம். 


சிறப்பு



  • அதிபத்த நாயனாருக்கு சிவனார் அருள் செய்த விழா ஆவணி மாதத்தில் நடக்கிறது. அதிபத்த நாயனார் வாழ்ந்த இடம் – செம்படவர்சேரி – தற்போது நம்பியாங்குப்பம் என்று அழைக்கப்படுகிறது 

  • ஆதிசேஷன் வழிபட்ட தலம் 

  • சக்திபீடங்களில் ஒன்றான தலம் 

  • இது சிவன் கோவில் ஆனாலும், மக்கள் நீலாயதாக்ஷி அம்மன் கோயில் என்றே அழைக்கின்றனர் 

  • கயிலையும் , காசியும் போல இத்தலமும் முக்திமண்டபத்துடன் திகழ்கிறது 

  • சப்தரிஷிகளுக்கும் சிவனார் சோமாஸ்கந்தராய் காட்சியளித்த தலம் 

  • சாலிசுக மன்னனுக்கு கல்யாண கோலம் காட்டும் பஞ்சக்குரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறுகிறது 

  • தசரதன் சனீஸ்வரரை  பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் 

  • அம்பாள் , முருகன் , திருமால் , அகத்தியர் , வசிஷ்டர் , முசுகுந்தன் , அரசகேசரி , விசித்திரகவசன் , விரூரகன் , பத்திரசேனன் , பாற்கரன் , மித்திரன் , காளகண்டன் , சண்டதருமன் முதலியோர் வழிபாட்டு அருள்பெற்ற தலம் 

  • வைகாசியில் திருக்கல்யாண விழா, ஆடிப்பூரம், சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை முதலான உற்சவங்கள். 

  • கோயில்களில் திருவிழாவின் போது, சுவாமி மாடவீதிகளைச் சுற்றிவிட்டு கோயிலுக்குத் திரும்பிவிடுவார். ஆனால், இக்கோயிலில் இங்கிருந்து கிளம்பும் சுவாமி, நாகையைச் சுற்றியுள்ள பொய்கைநல்லூர், பொறவாச்சேரி, சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் என ஏழு ஊர்களுக்குச் சென்றுவிட்டு கோயிலுக்குத் திரும்புகிறார். சாலிச மகாராஜா இந்த ஏழு தலங்களில் சிவபூஜை செய்தபின்பு, சிவன் இங்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். இதன் அடிப்படையில், சுவாமி 7 ஊர்களைச் சுற்றி வருகிறார்.

  • செய்த பாவத்திற்கு மன்னிப்பும், முக்தியும் கிடைக்க வழிபடவேண்டிய தலம் 

  • சிவன் கோயில்களில் பிரதோஷத்தின்போது, சிவன் ரிஷப வாகனத்தில் செல்வது வழக்கம். ஆனால் இக்கோயிலில் மோகினி வடிவில் பெருமாளும் புறப்பாடாகிறார். பிரதோஷ வேளைக்கு முன்பாக, பெருமாளின் மோகினி அவதாரம் நிகழ்ந்ததால், பிரதோஷத்தன்று மோகினி வடிவில் பெருமாள் புறப்பாடாகிறார். இவரை பிரதோஷத்தின்போது மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனாரின் மூலஸ்தானத்திற்குள் வைத்துவிடுகின்றனர்.


திருநாகை திருக்காயாரோகண சுவாமி திருக்கோயிலில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு ஆடிப்பூரம் (பூரம் கழித்தல்)



நீலாயதாக்ஷி அம்மனுக்குஆடிப்பூரம் கொடி ஏற்றுவதிலிருந்தே களை கட்ட ஆரம்பிக்கும்.விழா ஆரம்பநாள் முதல் காலையிலும், இரவிலும் அம்மன் வித விதமான அலங்காரத்துடனும், வித விதமான வாகனங்களுடனும், பரிவாரத்துடன் நகரில் ஊர்வலம் வரும் காட்சி அற்புதமாக இருக்கும்.


அம்மன் முன்னும் பின்னும் நாதஸ்வர கலைஞ்ர்களும்,ஓதுவார்களும் வாசித்தபடி ,ஓதியபடி வருவர்.


நான்கு வீதிகளிலும் மேடை அமைத்து கச்சேரி நடக்கும்.இரவில் கச்சேரி நடந்து ஸ்வாமி கோவிலை திரும்ப அடைய விடிகாலை ஆகி விடும்.கச்சேரியை கேட்க பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் வந்து விடிய விடிய கேட்டு செல்வார்கள்.


அவரவர் வீட்டு கல்யாணம் போல காலை,மாலை என்னேரமும் கோவிலில் திரளாக கூட்டம்! மக்கள் தங்கள், தங்கள் வீட்டு வாசல் முன் நீர் தெளித்து கோலமிட்டு விமரிசையாக வரவேற்பர்..


ஆடிப்பூரம் அன்று காலை அம்மன் அலங்காரமாக கோவில் பிரகாரத்தில் வரும்போது AKC நடராஜன்க்ளாரினெட் வாசிப்பார்.


அம்மன் வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து காட்ஷி தருவாள் நீலாயதாக்ஷி அம்மனின் பின்னலங்காரம் மிக விசேஷமாக இருக்கும்.அதை காணும் விதத்தில் சுற்றீவர கண்ணாடிகள் வைக்கப்படும்.


ஆடிப்பூரம் கழிப்பு காலை 1 மனிக்குள் முடியும்.இரவில் வாண வேடிக்கைகள் நடக்கும்.ஆடிப்பூரத்தன்று இரவு ஸ்ரீ நீலாயதக்ஷி அம்மன் வெண்மைநிற ஜரிகை புடைவையை அணிந்து, பின்னால் அழகிய ஜாடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரதத்தில் ஊர்வலம் வருவார்.


பார்க்க பார்க்க அலுக்காத ஸ்வரூபம்.அவர் அழகிய உருவை ரதத்தில் காண ஆயிரம் கண் வேண்டும்


இத்தலத்தில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோயில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும்.


முதலாம் இராஜஇராஜன் காலத்திய கல்வெட்டொன்று இக்கோயிலுக்கு உள்ளது. டச்சு கவர்னர் ஒருவர் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்த செய்தியைச் சானம் ஒன்றின் மூலம் அறிகின்றோம். 


இறைவன் - காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்.


இறைவி - நீலாயதாக்ஷி.


தலமரம் - மா.


தீர்த்தம் - 1) புண்டரீக தீர்த்தம் (கோயிலின் மேற்கில் உள்ளது.)


2) தேவ தீர்த்தம் (முக்தி மண்டபம் அருகில் உள்ளது.)


தியாகராஜா - சுந்தரவிடங்கர்.


நடனம் - தரங்கநடனம்.


மூவர் பாடல் பெற்றது. 


சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை முதலிய பல ஊர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. தஞ்சை - நாகூர் இருப்புப் பாதையில் உள்ள இருப்புப்பாதை நிலையம். 


நாளை  திருக்காராயில் - ஆதிவிடங்கர்   கோயில்  தொடரும்.




இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.



தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்






அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்